ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பென்னாகரம்:
புரட்டாசி மகாளய அமாவாசையையொட்டி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் காவிரி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தால் குடும்பத்தில் வளம் செழிக்கும் என்பது ஐதீகம். இதனால் அமாவாசை நாட்களில் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
புரட்டாசி மகாளய அமாவாசையொட்டி நேற்று ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அவர்கள் வாழை இலையில் பச்சரிசி, தேங்காய், பழம், காய்கறி, மளிகை பொருட்கள் உள்ளிட்டவற்றை வைத்து பூஜைகள் செய்து முன்னோர்களை நினைத்து வழிபட்டனர். பின்னர் பூஜை செய்த பொருட்களை அவர்கள் காவிரி ஆற்றில் விட்டனர்.
சாமி தரிசனம்
தொடர்ந்து அவர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி அங்குள்ள காவிரி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.