திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
மகாளய அமாவாசைையயொட்டி திருச்செந்தூர் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் வழிபட்டனர்.
தமிழ் மாதங்கள் ஆடி, தை அமாவாசை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை போன்ற நாட்களில் இந்துக்கள் கடல் மற்றும் நதிக்கரைகளில் புனித நீராடி, தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கம்.
அதுபோல் புரட்டாசி மகாளய அமாவாசையை முன்னிட்டு நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
கடலில் புனித நீராடல்
மகாளய அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே ஏராளமானோர் கடலில் புனித நீராடி, கடற்கரையில் அமர்ந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
பின்னர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
கயத்தாறு
இதேபோல் கயத்தாறு அகிலாண்டேஸ்வரி சமேத கோதண்டராமேஸ்வரர் கோவிலில் மகாளய அமாவாசையையொட்டி கயத்தாறு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்தும், மதுரை, திருச்சி, கும்பகோணம், சிவகாசி, விருதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஏராளமானவர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.