எடப்பாடி நகராட்சி பகுதியில் ரூ.2 கோடியில் தார்சாலை அமைக்கும் பணி முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி தொடக்கம்
எடப்பாடி நகராட்சி பகுதியில் ரூ.2 கோடியில் தார்சாலை அமைக்கும் பணிமுன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி தொடங்கி வைத்தார்
எடப்பாடி
எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட வீரப்பம்பாளையம், கவுண்டம்பட்டி, மேட்டுத்தெரு மற்றும் கா.புதூர் ஆகிய பகுதிகளில் ரூ.2 கோடி மதிப்பிலான நகர்ப்புற சாலைகள் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட 30 வார்டுகளில் சுமார் 35 பழுதடைந்த சாலைகளை ரூ.2 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
தொடர்ந்து எடப்பாடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 18 புதிய சாலைகளும், கவுண்டம்பட்டி பகுதியில் புதிய மருத்துவமனை கட்டிடமும், நகராட்சி பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் புதிய நூலக கட்டிடமும் விரைவில் அமைய உள்ளது. எடப்பாடி நகரின் மையப்பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள பஸ் நிலையம் முழுவதும் இடித்து அகற்றப்பட்டு அங்கு அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன பஸ் நிலையம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் என கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் சம்பத்குமார், நகர மன்ற தலைவர் டி.எஸ்.எம். பாஷா, நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) சேகர், நகராட்சி பொறியாளர் சரவணன், அட்மா திட்ட குழு தலைவர் பரமசிவம் மற்றும் வினோஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.