கொட்டும் மழையில் தார்சாலை அமைக்கும் பணி; மக்கள் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
கொட்டும் மழையில் தார்சாலை அமைக்கும் பணி நடந்தது. இதனால் வரிப்பணம் வீணாவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
திருச்சி மாநகர பகுதிகளில் தற்போது சாலைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் 50-வது வார்டு தென்னூர் கிழக்கு அண்ணாநகரில் உள்ள வீதிகளில் தார் சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு இருந்தது. அதில் குறுக்கு வீதிகள் அனைத்தும் 30 அடி நீளம் உள்ள நிலையில் பிரதான பாரதிதாசன் வீதியில் சாலை 40 அடி நீளம் உள்ளது. ஆனால் 30 அடிக்கு மட்டுமே சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் தார் சாலை அமைக்கும் முன் பழைய சாலையை சுரண்டி, பிறகு அதன் மேல் தார்சாலை போட வேண்டும் என்று அரசு விதிமுறை உள்ளது. ஆனால் பழைய சாலையை முழுவதும் அகற்றாமல், மேலோட்டமாக ஜல்லியை மட்டும் கரைத்து எடுத்து தார்சாலை அமைக்கப்படுவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கவுன்சிலர் மற்றும் மேயரிடம் புகார் தெரிவித்ததை தொடர்ந்து அந்த வீதியில் தார்சாலை அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க கூறியதாக தெரிகிறது.இந்தநிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் திருச்சி மாநகரில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை பெய்வது போல் குளிர்ந்த காற்று வீசியது. அப்போது, மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் சுமார் 4.45 மணி அளவில் தென்னூர் கிழக்கு அண்ணாநகர் பாரதிதாசன் வீதிக்கு ரெடிமேட் தார் கலவை மற்றும் சாலை போடும் எந்திரங்களுடன் வந்தனர்.
அப்போது லேசாக மழைச்சாரல் விழ தொடங்கியது. இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்த எஸ்.பி.டி.சுகுமாறன், ஜெயபால், பெல் அதிகாரி நசிருதீன், வேம்பு, ஏழுமலை மற்றும் பொதுமக்கள் மழை பெய்யும்போது சாலை போட்டால் எப்படி தரமாக இருக்கும்?. ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவின் படி சாலையை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்காமல் மேலோட்டமாக கரைத்து விட்டுள்ளீர்கள். எனவே மழையில் தார்சாலை அமைக்கக்கூடாது என்று கூறியுள்ளனர்.ஆனால் அதை ஒப்பந்ததாரர் கேட்காமல் கொட்டும் மழையில் தார்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டார். இதனால் பொதுமக்களுக்கும், ஒப்பந்ததாரருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து சாலை அமைக்கும் பணி நிறுத்தப்பட்டது. அதற்குள் அவர்கள் பாதி தார் சாலையை கொட்டும் மழையில் போட்டு விட்டனர்.
இவ்வாறு மழையில் சாலை போடுவதால் சாலை தரமின்றி இருப்பதாகவும், பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதிதாக சாலை அமைக்கப்பட்ட பல பகுதிகளில் ஒரு சில மாதங்களிலேயே தார்சாலை சேதமடைந்து விட்டதாகவும் இதனால் மக்கள் வரிப்பணம் வீணாவதாகவும் பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டி வருகிறார்கள்.