ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை


ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை
x

சொத்து மதிப்பீடு சான்றிதழ் கேட்ட விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பளித்தது.

தேனி

ரூ.5 ஆயிரம் லஞ்சம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா ஆத்தங்கரைப்பட்டியை சேர்ந்தவர் சரவணன். விவசாயி. இவர் தனக்கு சொந்தமான சொத்துக்கு சொத்து மதிப்பீடு சான்றிதழ் வாங்குவதற்காக கடந்த 2011-ம் ஆண்டு ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்தார். முறையான ஆவணங்கள் அனைத்தையும் அவர் இணைத்து இருந்தார். ஆனால் அப்போது ஆண்டிப்பட்டி தாசில்தாராக இருந்த நாகராஜன் (வயது 61), சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டார்.

இதையடுத்து தாசில்தார் லஞ்சம் கேட்ட விவரத்தை தேனி லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் சரவணன் தெரிவித்தார். பின்னர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூ.5 ஆயிரத்தை சரவணனிடம் கொடுத்து அனுப்பினர். கடந்த 2011-ம் ஆண்டு ஜூலை மாதம் 28-ந்தேதி சரவணன் அந்த பணத்தை ஆண்டிப்பட்டி தாலுகா அலுவலகத்துக்கு சென்று தாசில்தார் நாகராஜனிடம் கொடுத்தார். அவர் அந்த பணத்தை வாங்கிய போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் நாகராஜனை கைது செய்தனர்.

தாசில்தாருக்கு சிறை

பின்னர் அவர் மீது, தேனி மாவட்ட தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோபிநாதன் தீர்ப்பளித்தார்.

லஞ்சம் வாங்கிய நாகராஜனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 மாதம் கடுங்காவல் சிறை தண்டனையும் விதித்து தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு தீர்ப்பு கூறினார்.

1 More update

Next Story