வியாபாரிகளுடன் தாசில்தார் பேச்சு வார்த்தை
உடுமலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோர போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், வியாபாரிகளுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
தளி,
உடுமலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோர போராட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில், வியாபாரிகளுடன் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
டாஸ்மாக் கடை
உடுமலை நகராட்சி பசுபதி வீதியில் கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை மற்றும் உடுமலை நகர கூட்டுறவு வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. அத்துடன் பொதுமக்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள் கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் அலுவலகங்கள் இயங்கி வருவதுடன் ஏராளமான குடியிருப்புகளும் உள்ளது. இந்த வீதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது.
இந்த நிலையில் உடுமலை- தளி பிரதான சாலையை ஒட்டியவாறு சாலையின் நுழைவுப் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. .அங்கு மது பாட்டில்களை வாங்க வருகின்ற மதுபிரியர்கள் குடியிருப்பு வீடுகளின் வாசப்படிகள், வங்கிகளின் நுழைவு வாயில் மற்றும் சாலையில் அமர்ந்து குடிப்பது வாடிக்கையாக கொண்டு உள்ளனர். மேலும் காலி மது பாட்டில்களை சாலையில் உடைத்து அராஜகம் செய்தும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வந்தனர்.
அதைத் தொடர்ந்து டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உடுமலை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் பால நாகமாணிக்கம், செயலாளர் குமரன், பொருளாளரும் உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளருமான எஸ். கே.மெய்ஞானமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் சார்பில் முதல்-அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளிக்கப்பட்டது.
பேச்சுவார்த்தை
மேலும் வருகின்ற 7-ம் தேதி டாஸ்மாக் கடை முன்பு ஆர்ப்பாட்டமும், உடுமலையில் ஒரு நாள் அடையாள கடையடைப்பும் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் அறிவித்தனர். இதையடுத்து நேற்று உடுமலை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சுந்தரம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாகண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் தரப்பில் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது கலெக்டர் கூட்டத்தில் இது குறித்து விவாதித்து முடிவெடுக்கப்படும் என்றும் அது வரையிலும் போராட்டத்தை கைவிடுமாறும் அதிகாரிகள் தரப்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.அதை தொடர்ந்து போராட்டத்தை ஒத்தி வைப்பதாகவும் நடவடிக்கை எடுக்க விட்டால் அடுத்த கட்ட போராட்டம் கொடுத்து விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.