"டாஸ்மாக் மது குடித்து இறப்பு என்பது அரசின் தோல்வியை காட்டுகிறது"
டாஸ்மாக் மது குடித்து இறப்பு என்பது அரசின் தோல்வியை காட்டுகிறது என்று பா.ஜ.க. மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் கூறினார்.
திண்டுக்கல் மேற்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் பழனியில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் மகாலெட்சுமி முன்னிலை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் ஆயக்குடி, பாலசமுத்திரத்தில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும், சட்டத்துக்கு புறம்பான மது விற்பனையை தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிரதமர் மோடி ஆட்சியின் சாதனைகளை அனைத்து மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் டாஸ்மாக்கை மூட வேண்டும் என போராட்டங்கள் நடத்திய தி.மு.க, தற்போது டாஸ்மாக் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் அதிக வருவாய் ஈட்டும் அதிகாரிகளை பாராட்டி கவுரவிக்கிறது.
தஞ்சையில் டாஸ்மாக் மது குடித்தவர்கள் இறந்துள்ளனர் என்பது அரசின் தோல்வியை காட்டுகிறது. இந்த சம்பவத்தில் இறந்தவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்திருப்பதாக மாவட்ட நிர்வாகம் கூறுகிறது. இது மக்களை திசை திருப்பும் முயற்சி. இதுகுறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.