மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
திருப்பூர்


பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கடையில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க வருவது வழக்கம். இந்த நிலையில் அங்கு மதுவாங்க வரும் சிலர் அங்கேயே குடித்து விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்து உறங்குவதும், ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் என அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் அந்த மதுக்கடையை அங்கிருந்து அகற்றக்கோரி மதுக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இது குறித்து அவர்கள்கூறுகையில்"இங்கு அமைந்துள்ள மதுக்கடையால் பல்வேறு இன்னல்கள் ஏற்படுகிறது. மது வாங்கி குடித்துவிட்டு போதைதலைக்கேறி அருகில் உள்ள கடைகளின் முன்பு மதுப்பிரியர்கள் படுத்து விடுகின்றனர். மேலும் பலர் பெண்கள் வருவது கூட தெரியாமல் அங்கேயே இயற்கை உபாதைகளை கழிக்கின்றனர். அவர்கள் எந்தநேரமும் போதையில் நிற்பதால் அவ்வழியே பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பெண்கள் ஆகியோர் நடந்து செல்வதற்கு அச்சப்படுகின்றனர்.

மேலும் பல்லடம்- செட்டிபாளையம் சாலை போக்குவரத்து நிறைந்த சாலை ஆகும். மது வாங்க வருபவர்கள் கடை முன்பு நடுரோட்டில் வாகனங்களை நிறுத்தி செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே இந்த மதுக்கடையை இங்கிருந்து அகற்ற வேண்டும் என தெரிவித்தனர்.தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த பல்லடம் போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மதுக்கடையை அகற்ற வேண்டும் இல்லாவிட்டால் வருகிற 8-ந் தேதி மதுக்கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம்" என பொதுமக்கள் தெரிவித்தனர்.


Next Story