டாஸ்மாக் பார் உரிமம் பெற்றுத்தருவதாக ரூ.7¼ லட்சம் மோசடி-தம்பதி மீது புகார்
டாஸ்மாக் பார் உரிமம் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.7¼ லட்சம் மோசடி செய்ததாக கணவன்- மனைவி உள்பட 4 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வாணியம்பாடி
டாஸ்மாக் பார் உரிமம் பெற்றுத்தருவதாகக் கூறி ரூ.7¼ லட்சம் மோசடி செய்ததாக கணவன்- மனைவி உள்பட 4 பேர் மீது திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம், திருவாண்டிப்பாடியை அடுத்த மோரூர் கிராமத்தை சேர்ந்த கார்த்தி என்பவர் திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானிடம் புகார் மனு அளித்துள்ளளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
ரூ.7¼ லட்சம் மோசடி
சங்ககிரியில் நானும், எனது கிராமத்தை சேர்ந்த நிர்மலா என்பவரும் மதுபார் நடத்தி, சிறு சிறு தின்பண்டங்களை விற்பனை செய்யும் கடையும் நடத்தி வந்தோம்.
இந்த நிலையில் கொங்கணாபுரத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் டாஸ்மாக் பார் உரிமம் பெற்றுத் தருவதாகக் கூறி, திருப்பத்தூரை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் ஒருவரை அறிமுகம் செய்தார்.
அவர்கள், ''எங்களுக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நல்ல பழக்கம். அவர்கள் மூலம் பார் உரிமம் பெற்றுத்தருகிறோம்'' என்று கூறினர். அதனை உண்மை என நம்பினோம். அதன்படி நாட்டறம்பள்ளி அருகில் ஒரு கடையில் வைத்து ரூ.7 லட்சத்து 35 ஆயிரத்தை எனது பெற்றோர் முன்னிலையில் 3 பேரும் பெற்றுக்கொண்டனர். அதற்கு ஆடியோ ஆதாரம் உள்ளது.
4 பேர் மீது புகார்
பணத்தை உடனடியாக வேண்டும் என்று கேட்டதால் என்னுடைய அம்மாவின் நகை, சீட்டு பணம் மற்றும் வட்டிக்கு வாங்கிய பணம் ஆகியவற்றை அந்த தம்பதி உள்ளிட்ட 3 பேரிடம் கொடுத்தேன். ஆனால் அவர்கள் பார் உரிமம் பெற்றுத்தர வில்லை.
பணத்தை திருப்பி கேட்டால் தரமுடியாது என்று கூறி மிரட்டல் விடுக்கின்றனர். இவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து, என்னுடைய பெற்றோருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்'' என்று கூறி உள்ளார்.
மனுவை பெற்றுக் கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் அவர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.