பனைமரத்தில் ஏறிய டாஸ்மாக் ஊழியர் தவறி விழுந்து சாவு


பனைமரத்தில் ஏறிய டாஸ்மாக் ஊழியர் தவறி விழுந்து சாவு
x

குடியாத்தம் அருகே பனைமரத்தில் ஏறிய டாஸ்மாக் ஊழியர் தவறி விழுந்து பலியானார்.

வேலூர்

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த தட்டப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி (வயது 52). இவருக்கு மனைவி, 3 மகன்கள் உள்ளனர். அவர், வேலூரை அடுத்த பென்னாத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். வேலூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளராக இருந்து வந்தார்.

நேற்று தட்டப்பாறை கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நடந்தது. திருவிழாவை காண அவரின் வீட்டுக்கு உறவினர்கள் பலர் வந்திருந்தனர். அவர்களுக்கு நுங்கு வெட்டி தருவதற்காக பழனி மூங்கப்பட்டு புதுமனை பகுதியில் உள்ள பனைமரத்தில் ஏறினார். அவர் திடீரென பனை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். அதில் பலத்த காயம் அடைந்த பழனியை உறவினர்கள் மீட்டு குடியாத்தத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளித்து, மேல்சிகிச்சைக்காக வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story