அரசு ஊழியர்களுடன் இணைந்து டாஸ்மாக் பணியாளர்களும் வேலை நிறுத்தம்
கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்களுடன் இணைந்து டாஸ்மாக் பணியாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் என்று சங்க சிறப்பு தலைவர் பாலகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். துணை தலைவர் கண்ணையன் முன்னிலை வகித்தார். செயல் தலைவர் பழனிபாரதி வரவேற்றார். பொதுச்செயலாளர் கோதண்டம் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு தலைவர் பாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.
கூட்டத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் பல்வேறு முறைகேடுகளை அரசு தடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். பின்னர் சிறப்பு தலைவர், நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
தமிழ்நாடு டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடக்கிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி டாஸ்மாக் கடைகளில் 10 ஆண்டுகள் தொகுப்பூதியத்தில் பணியாற்றுபவர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை அவர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. அனுமதியின்றி எத்தனை பார்கள் நடத்தப்படுகிறது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை அரசு வெளியிட வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களின் கோரிக்கைகளை 19 ஆண்டுகளாக அரசு புறக்கணித்து வருகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் அறிவித்துள்ள ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களும் தங்களின் கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக கலந்துகொள்கின்றனர் என்றார்.