செல்போன் கோபுரத்தில் ஏறி டாஸ்மாக் ஊழியர் போராட்டம்


செல்போன் கோபுரத்தில் ஏறி டாஸ்மாக் ஊழியர் போராட்டம்
x

செல்போன் கோபுரத்தில் ஏறி டாஸ்மாக் ஊழியர் போராட்டம்

மயிலாடுதுறை

சீர்காழி

சீர்காழி அருகே தொடர்ந்து வேலை வழங்கக்கோரி செல்போன் கோபுரத்தில் ஏறி டாஸ்மாக் ஊழியர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

டாஸ்மாக் ஊழியர்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே தெற்கு விநாயககுடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்(வயது 41). இவர், சீர்காழி அருகே உள்ள புத்தூர் டாஸ்மாக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த கடையில் பணிபுரியும் மேற்பார்வையாளருக்கும், இவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சுரேஷ் மயிலாடுதுறை அருகே உள்ள திருநன்றியூர் டாஸ்மாக் கடைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து சுரேஷ் திருநன்றியூர் டாஸ்மாக் கடைக்கு பணிக்கு சென்றார்.

தொடர்ந்து பணி மாற்றம்

ஆனால் அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளர் அங்கு கூடுதலாக ஆட்கள் பணி புரிவதாகவும், எனவே வேறு கடைக்கு சென்று பணி புரியுமாறும் சுரேசிடம் கூறியுள்ளார். இதையடுத்து சுரேஷ் சீர்காழி அருகே உள்ள காத்திருப்பு என்ற இடத்தில் உள்ள டாஸ்மாக் கடைக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார்.

அங்கு பணிபுரியும் மேற்பார்வையாளரோ, அந்த கடையில் அதிக அளவில் ஆட்கள் பணியில் உள்ளதாகவும், அந்த கடையில் கையெழுத்து போட்டு விட்டு புதுப்பட்டினம் டாஸ்மாக் கடைக்கு சென்று அங்கு வேலை பார்க்குமாறு கூறியுள்ளார்.

செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம்

இதனால் மனம் உடைந்த சுரேஷ், சீர்காழி அருகே உள்ள சேந்தங்குடி ெரயில்வே மேம்பாலம் அருகில் உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுரேசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சுரேஷ் செல்போன் கோபுரத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.

தொடர்ந்து வேலை வழங்க கோரிக்கை

பின்னர் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுரேசிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவரிடம் தொடர்ந்து தனக்கு வேலை வழங்க வேண்டும் என்று சுரேஷ் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு இது தொடர்பாக தொடர்புடையவர்களிடம் பேசி ஏற்பாடு செய்வதாக கூறினார். அதன் பிறகே சுரேஷ் தனது போராட்டத்தை கைவிட்டு செல்ேபான் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார். இதனைத்தொடர்ந்து போலீசார் சுரேசை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதுடன் இனிமேல் இதுபோன்ற போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.


Next Story