டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்


டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்
x

அத்திப்பாடி செல்லும் சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

அத்திப்பாடி செல்லும் சாலையில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது வாணாபுரம். இங்கு அத்திப்பாடி செல்லும் சாலை அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்திற்கு வாணாபுரம், மழுவும்பட்டு, சதாகுப்பம், அகரம் பள்ளிப்பட்டு, அத்திப்பாடி, வாழவச்சனூர், எடக்கல், பெருந்துறைப்பட்டு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

இந்த சுகாதார நிலையம் அருகில் அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனால் மதுபிரியர்கள் இங்கு வந்து மது வாங்கிவிட்டு சுகாதார நிலையம் செல்லும் சாலை மற்றும் அத்திப்பாடி செல்லும் சாலையோரம் மட்டுமல்லாமல் சாலையின் மையப்பகுதியில் அமர்ந்து மதுஅருந்தி வருகின்றனர். இதனால் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மதுபிரியர்கள் மதுவை குடித்தவுடன் போதை அதிகமானால் மதுபாட்டில்களை சாலையில் உடைத்தும், அவ்வழியாக செல்பவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டும் வருகின்றனர். மேலும் மதுகுடித்துவிட்டு அருகில் இருக்கும் சுகாதார நிலையத்திற்கு சென்று அங்குள்ளவர்களிடம் தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், அங்கேயே போதையில் படுத்து விடுவதாகவும் சுகாதார நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் கர்ப்பிணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

எனவே, சுகாதார நிலையத்திற்கு அருகில் இயங்கும் டாஸ்மாக் கடைைய மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள், கர்ப்பிணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அத்திப்பாடி பகுதியை சேர்ந்த ரவி கூறியதாவது:-



டாஸ்மாக் கடை மாற்ற வேண்டும்

வாணாபுரம் பகுதியில் இருந்து அத்திப்பாடி வழியாக பழையனூர் செல்லும் பிரதான சாலையாக இருந்து வருகிறது. அன்றாடம் நூற்றுக்கணக்கான நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த சாலை வழியாக அரசு சுகாதார நிலையத்திற்கு சென்று வருகின்றனர்.

மதுபிரியர்கள் மதுவை குடித்துவிட்டு சாலையில் செல்பவர்களிடம் தகராறில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் பாட்டில்களையும் சாலையில் உடைத்து அச்சுறுத்தி வருகின்றனர். இதனால் அவ்வழியாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சென்றுவர அச்சப்படுகின்றனர்.

சுகாதார நிலையத்திற்கு அருகில் டாஸ்மாக் கடை இருப்பதால் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு அரசு சுகாதார நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வாணாபுரம் பகுதியை சேர்ந்த சேகர் கூறியதாவது:-



'தினந்தோறும் விவசாய கூலி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் பொது மக்கள் அவ்வழியாக செல்கின்றனர்.

சாலையோரத்தில் டாஸ்மாக் கடை இருப்பதால் மதுவாங்க வருபவர்கள் சாலையில் இருசக்கர வாகனங்களை அப்படியே நிறுத்திவிட்டு சென்று விடுகிறார்கள். இதனால் அவ்வழியாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாத சூழலும் நிலவி வருகிறது. மேலும் மதுபிரியர்கள் மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை சாலையில் உடைத்து விடுவதால் வாகனங்கள் அடிக்கடி பஞ்சராவதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

சுகாதார நிலையத்திற்கு அருகில் டாஸ்மாக் கடை இருப்பதால் கர்ப்பிணிகள் மற்றும் அங்கு வரும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு டாஸ்மார்க் கடையை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story