டாஸ்மாக் கடையை மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
டாஸ்மாக் கடையை மாற்ற பொதுமக்கள் வலியுறுத்தல்
தாராபுரம்
தாராபுரம் என்.என்.பேட்டை டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
மதுக்கடை மூடல்
தாராபுரம் வட்டார பகுதியில் 15-க்கும் மேற்பட்ட அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 500 மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்தது. தாராபுரத்தில் 3 கடைகள் மட்டுமே மூடப்பட்டது. ஆனால் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள முக்கிய பகுதியான பூக்கடை கார்னர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டு வலுத்து வருகிறது.
நீதிமன்ற உத்தரவுபடி கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கடைகள் பெரும்பாலும் 150 மீட்டருக்கு அப்பால் கோவில்கள், குடியிருப்புகள் மற்றும் மசூதிகள், பொது இடங்கள் இருக்கும் பகுதியில் டாஸ்மாக் கடைகள் இயங்க கூடாது என உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்நிலையில் தாராபுரம் முக்கிய கடைவீதி பகுதியான பூக்கடைக்கார்னரில் செயல்பட்டு வரும் என்.என்.பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையால் வணிக நிறுவனங்கள், மளிகை கடைகள் பாதிக்கப்பட்டு வருகிறது.
அகற்ற கோரிக்கை
இந்த கடையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி தொழிலதிபர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் முயற்சிகள் செய்தும் இதுவரை அந்த கடையை அப்புறப்படுத்தமுடிய வில்லை. பெண்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் அப்பகுதியை கடக்கும்போது சிரமத்திற்குள்ளாகிறார்கள். அந்த பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களில் பொருட்கள் வாங்குவதற்கு வர முன்வருவதில்லை. அவ்வாறு வரும் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையே நிலவி வருகிறது. எனவே என்.என்.பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.