டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் அரிவாள் முனையில் ரூ.7¼ லட்சம் பறிப்பு


டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் அரிவாள் முனையில் ரூ.7¼ லட்சம் பறிப்பு
x
தினத்தந்தி 2 May 2023 12:15 AM IST (Updated: 2 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவை அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் அரிவாள் முனையில் ரூ.7¼ லட்சத்தை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோயம்புத்தூர்

ஆலாந்துறை

கோவை அருகே டாஸ்மாக் கடை விற்பனையாளரிடம் அரிவாள் முனையில் ரூ.7¼ லட்சத்தை பறித்துச்சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

டாஸ்மாக் கடை விற்பனையாளர்

கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள வடிவேலம்பாளையம் துளசி ஸ்கூல் வீதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்(வயது 40). இவர் பூலுவப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில்(கடை எண்: 1770) கடந்த 8 ஆண்டாக விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். மே தினத்தையொட்டி நேற்று டாஸ்மாக் கடைக்கு விடுமுறை என்பதால், நேற்று முன்தினம் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் அலைமோதியது. அதுபோன்று பூலுவபட்டி டாஸ்மாக் கடையிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் விற்பனையும் வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.

ரூ.7 லட்சத்து 38 ஆயிரம்

இந்த நிலையில் இரவு விற்பனையை முடித்த சண்முகசுந்தரம், தனது கடையில் விற்பனையான தொகையை சரிபார்த்தார். அப்போது அந்த கடையில் ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி இருந்தது. அந்த பணத்தை கடையில் வைத்துவிட்டு சென்றால் பாதுகாப்பு இல்லை என்று கருதிய அவர், அதை ஒரு பையில் வைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு எடுத்துச்சென்றார்.

இதற்காக அவர் மோட்டார் சைக்கிளில் அந்த பணம் இருந்த பையை முன்பக்கம் வைத்தபடி சென்றார். இரவு 11.30 மணியளவில் வடிவேலம்பாளையம் அருகே சென்றபோது திடீரென்று ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் வந்து சண்முகசுந்தரத்தை வழிமறித்தனர்.

போலீசில் புகார்

பின்னர் அவர்கள் அரிவாளை காட்டி, அவரை மிரட்டி பணம் இருந்த பையை கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சண்முகசுந்தரம், இது குறித்து ஆலாந்துறை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து சண்முகசுந்தரத்திடம் விசாரணை நடத்தியதுடன், அவர் கூறிய அடையாளங்களை வைத்து நள்ளிரவு நேரத்தில் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள். ஆனால் யாரும் சிக்கவில்லை. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வலைவீச்சு

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையை சேர்ந்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதுடன், தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறும்போது, சண்முகசுந்தரத்திடம் பணத்தை பறித்த மர்ம ஆசாமிகள் நீலநிற மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக அவர் கூறி உள்ளார். எனவே இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பணத்தை பறித்த மர்ம ஆசாமிகளின் உருவம் பதிவாகி இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறோம். விரைவில் குற்றவாளிகளை பிடித்து விடுவோம் என்றனர்.

டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை வீட்டுக்கு கொண்டு சென்றபோது விற்பனையாளரிடம் இருந்து பறித்துச்செல்லப்பட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story