டாஸ்மாக் கடைகளில் மது விற்பனைக்கேற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும்
தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளில் விற்பனைக்கேற்ப பணியாளர்களை நியமிக்க வேண்டும். அதாவது, அதிகம் மது விற்பனையாகும் கடைகளில் கூடுதல் ஊழியர்களும், குறைந்த அளவு மது விற்கும் கடைகளில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். டாஸ்மாக் அதிகாரி, பணிமாறுதல் என்ற பெயரில் தொலைதூரங்களில் பணிமாறுதல் செய்கிறார். இந்த நிலையை தவிர்க்க வேண்டும். காரணமின்றி இடமாற்றம் செய்வதை கைவிட வேண்டும்.
பணிமாறுதல்களில் ஆளுங்கட்சி தொழிற்சங்க நிர்வாகிகளின் தலையீடு அதிகமாக உள்ளது. இதை கட்டுப்படுத்த வேண்டும். பணியாளர்களிடம் லஞ்சம் வாங்கும் நிலையை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மாவட்ட மேலாளர் அலுவலகம் முன்பு அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந் தேதி டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது மாவட்ட தலைவர் அல்லிமுத்து, செயலாளர் பாலமுருகன், துணை செயலாளர் முத்துக்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.