பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்


பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும்
x

குடியாத்தத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள 2 டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

வேலூர்

குறைதீர்வு கூட்டம்

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி முன்னிலை வகித்தார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உத்தரவிட்டார்.

ஆற்காட்டான்குடிசையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சங்கம், பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் அளித்துள்ள மனுவில், இப்பள்ளியில் 85 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு 3 கட்டிடங்கள் இருந்தது. பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டதால் 2 கட்டிடங்களை இடித்து விட்டனர். தற்போது ஒரே கட்டிடத்தில் அனைத்து மாணவர்களும் படிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே பள்ளிக்கு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

வீட்டு மனைப்பட்டா

அணைக்கட்டு தாலுகா குருவராஜபாளையம் பாலப்பாடி கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் மற்றும் தர்மகொண்டராஜா திருமலை கோவில் ஆன்மின சமாஜக அறக்கட்டளை சார்பில் அளித்துள்ள மனுவில், கோவிலுக்கு மின் இணைப்பு பெற விண்ணப்பித்தோம். அதற்காக வனத்துறை சார்பில் தடையில்லா சான்று பெற வேண்டும். இதுதொடர்பாக பதிவு செய்தால் ஏற்கப்படவில்லை. இதனால் மின்வசதி இல்லாமல் கோவில் இருளில் உள்ளது. இதுதொடர்பாக வழிமுறைகளை வழங்கி கோவிலுக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வேலூர் மாவட்ட குழு சார்பில் அளிக்கப்பட்ட மனுவில், வேலூர் மாநகராட்சியில் பல இடங்களில் பாதாள சாக்கடை, குடிநீர் திட்டப்பணிகள் முடிக்கப்பட்ட பின்னர் சாலைப்பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர்.

அனைத்திந்திய கிராமபுற விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் அளித்துள்ள மனுவில் துத்திக்காடு ஊராட்சியில் பல ஆண்டுகளாக வசிக்கும் இருளர் இன மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மதுபான கடைகள்

எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நிர்வாகிகள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

குடியாத்தம் நகரில் காமராஜர் பாலம் அருகில் ஒரு இடத்தில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த பகுதி பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாகும். பள்ளி குழந்தைகள், பெண்கள் பலர் இந்த வழியாக செல்கின்றனர். இந்த கடையினால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். எனவே கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.

முன்னதாக தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து உணவுகள் கொண்ட கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பெண் திடீர் தர்ணா

வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு ஏராளமான பொதுமக்கள் மனு அளிக்க வந்தனர். இந்தநிலையில் குறைதீர்வு கூட்டம் நடைபெறும் அரங்கம் முன்பு திடீரென ஒரு பெண் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைப்பார்த்த அங்கு பணியில் இருந்த போலீசார் அந்த பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர் கூறுகையில், எனது பெயர் பரிமளா (வயது 39). மேல்பாடி கிராமத்தில் வசித்து வருகிறேன். எனது தந்தை எனக்கு நிலத்தை வழங்கினார். ஆனால் அவரது பெயரில் பட்டா உள்ளது. அந்த பட்டாவை எனது பெயருக்கு மாற்ற முயன்றேன். ஆனால் இதை உறவினர் ஒருவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தடுக்கிறார். எனக்கு பட்டா வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story