டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிட வேண்டும்
காடுவெட்டிபாளையத்தில் நெடுஞ்சாலை அருகே டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
கோவை
காடுவெட்டிபாளையத்தில் நெடுஞ்சாலை அருகே டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிட வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.
குறைதீர்ப்பு கூட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தங்களது குறைகள் தொடர்பான கோரிக்கை மனுக்களை கலெக்டர் சமீரனிடம் அளித்தனர்.
மனு அளிக்க வரும் பொது மக்களை போலீசார் சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்தனர்.
அன்னூர் அருகே உள்ள காடுவெட்டிபாளையம் பகுதி மக்கள் அளித்த மனுவில், காடுவெட்டி பாளையத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக டாஸ் மார்க் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அங்கு பள்ளிக்கூடம், பஸ் நிறுத்தம் உள்ளதால் மதுக்கடை அமைந்தால் விபத்துகள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே அங்கு டாஸ்மாக் கடை அமைப்பதை கைவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மாமுல் கேட்டு மிரட்டல்
கோவை மாவட்ட அனைத்து டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம், அனைத்து தொழிற்சங்க கூட்டுக் குழுவினர் அளித்த மனுவில், கோவை மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன.
இங்கு விற்பனையாகும் மதுபாட்டிலுக்கு ரூ.2 மாமூல் தர வேண்டும் என்று சமூகவிரோதிகள் சிலர் மிரட்டு கின்றனர்.
இதனால் டாஸ்மாக் ஊழியர்களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் உள்ளது. எனவே உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.
கொசுத்தொல்லை
ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்க நிறுவன தலைவர் லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் பொதுமக்கள் கொசு வலை யால் மூடியபடி வந்து அளித்த மனுவில், சூலூர் தாலுகா அலுவலகம் முன் கழிவுநீர் சாக்கடை வசதி இல்லாததால் கொசுத் தொல்லையால் அவதிப்பட்டு வருகிறோம்.
ஆனால் அங்கு சாக்கடை கட்டுவதற்கு சிலர் தடையாக உள்ளனர். ஆனால் தகவல் அறியும் சட்டத்தில் அந்த இடம் அரசாங்கத்திற்கு சொந்தமானது என தெரிய வந்துள்ளது.
எனவே அங்கு சாக்கடை வாய்க்கால் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.