பணி பாதுகாப்பு வழங்கக்கோரிடாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் பணியை புறக்கணித்து போராட்டம்
பணி பாதுகாப்பு வழங்கக்கோரி விழுப்புரம்- கள்ளக்குறிச்சி மாவட்ட டாஸ்மாக் தொழிற்சங்கத்தினர் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் பணியாளர் கொலை
சிவகங்கை மாவட்டம் பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வந்த அர்ச்சுனன் என்பவர் மீது கடந்த 3-ந் தேதியன்று அப்பகுதியை சேர்ந்த சிலர், பெட்ரோல் குண்டு வீசியதில் பலத்த காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நள்ளிரவு இறந்தார்.
இந்த சம்பவத்தை கண்டித்தும், டாஸ்மாக் பணியாளர்களுக்கு உரிய பணி பாதுகாப்பு வழங்கக்கோரியும், இறந்த அர்ச்சுனனின் குடும்பத்திற்கு இழப்பீடு தொகையாக ரூ.50 லட்சம் வழங்க வேண்டும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணியை புறக்கணித்து போராட்டம்
அந்த வகையில் விழுப்புரம்- கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்ட டாஸ்மாக் அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடைபெற்றது. 2 மாவட்டங்களிலும் உள்ள 220 டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும்
அனைத்து சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் நேற்று பகல் 12 மணி முதல் மதியம் 1 மணி வரை பணிக்கு செல்லாமல் பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரத்தில் உள்ள டாஸ்மாக் சேமிப்பு கிடங்கு முன்பு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநில செயலாளர் கணபதி, ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், பாட்டாளி தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன், விற்பனையாளர் சங்க மாநில துணை செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயலாளர் இளங்கோவன், மாவட்ட தலைவர் அன்பழகன், தமிழக அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் கோபாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் அனைத்து தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் பலர் கலந்துகொண்டனர்.