டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்


டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
x

சின்னமனூர் அருகே டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

சின்னமனூர் நகரில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும் எள்ளுக்கட்டை சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த சாலை வழியாக தினந்தோறும் ஏராளமான விவசாயிகள் சென்று வருகின்றனர். இதற்கிடையே இந்த சாலையில் அமர்ந்து சிலர் மது குடிக்கின்றனர். மேலும் மதுபான பாட்டில்களை உடைப்பதுடன் அந்த வழியாக செல்பவர்களிடம் தகராறில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாநில செயற்குழு உறுப்பினர் பாலபாரதி தலைமையில் இன்று ஊர்வலம் நடந்தது.

பின்னர் கட்சியினர் அந்த டாஸ்மாக் கடையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடையை மூட வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த சின்னமனூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story