'டாட்டூ' இளைஞர்களின் பச்சைகுத்தும் மோகம்
‘டாட்டூ’ இளைஞர்களின் பச்சைகுத்தும் மோகம் குறித்து கருத்து தெரிவித்துள்ளனர்.
டாட்டூ. இந்த சொல் இன்றைய இளைஞர்களின் மந்திர சொல்லாக மாறி வருகிறது. ஆன்ட்ராய்டு போன் இல்லாத இளைஞர் ஒருவரை கூட காண முடியாது என்ற ரீதியில் தான் இன்றைய டாட்டூ மோகமும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
பச்சை குத்துதல்
நமது தாத்தா, பாட்டி போன்ற மூதாதையர்கள் காலத்தில் பச்சை குத்திக்கொள்வது என்பது நம் நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக அந்த காலத்து பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறக்கூடாது என்பதற்காக அதை கைகளில் பச்சை குத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். யாராவது கணவர் பெயரை கேட்டால் அந்த கால பெண்கள் கையை காட்டுவார்கள்.
இது மாற்றம் பெற்று அடுத்து வந்த காலக்கட்டங்களில் கணவர் பெயரை பச்சை குத்தும் நடைமுறை சடங்கு, சம்பிரதாயமாக மாறி போய் இருந்தது. பின்னர் படிப்பறிவு, நாகரிக வளர்ச்சியால் பழங்கால பச்சை குத்தும் மரபு குறைய தொடங்கியது. பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறுவதற்கு தயக்கம் காட்டும் நிலை கடந்து போனது. இவ்வாறு பழங்கால பச்சை குத்தும் நடைமுறை குறைந்து போன அதேவேளையில், அது இன்றைக்கு கால மாற்றத்தில் மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் டாட்டூவாக புது வடிவம் பெற்று விட்டது.
நடிகர், நடிகைகள்
இந்தியாவில் பிரபலமாக பல பாலிவுட் பிரபல நடிகர், நடிகைகள் தங்கள் காதலர்கள் பெயரை டாட்டூவாக குத்திக்கொண்டது டாட்டூவின் மீது இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்களின் கவனத்தை ஈர்க்க ெதாடங்கியது என கூறலாம். இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு வீரர்கள் என்று பலரும் டாட்டூ குத்திக்கொண்டு டாட்டா காட்டுவது ஒரு ஸ்டைலாக தான் மாறி விட்டது. குறிப்பாக இளம்பெண்கள் தங்கள் அழகுக்கு அழகு சேர்க்க ெமகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நாகரிகத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள். முதலில் பெயரை மட்டுமே டாட்டூஸ் குத்திய இளைஞர்கள், இளம்பெண்கள் தற்போது கை, கால் தொடங்கி உடலில் பல்வேறு இடங்களில் விதவித வண்ணங்களில் டாட்டூஸ் வரைவது தற்போது பேஷனாகி விட்டது.
அழகானதா? ஆபத்தானதா?
இந்த டாட்டூ குத்துவது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். டாட்டூ கிரைன்லோமா, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ், டாட்டூ சர்காயடேசிஸ், பங்கல் இன்பெக்ஷன் போன்ற பல விதமான தோல் நோய்கள் இந்த டாட்டூவால் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இளைஞர்களின் டாட்டூஸ் மோகம் அழகானதா? அல்லது ஆபத்தானதா? என்று இளைஞர்கள், டாக்டர்கள் கூறிய கருத்துளை காண்போம்.
பக்கவிளைவு
விருதுநகர் தோல் நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் பிரியதர்ஷினி:-
கடந்த காலங்களில் குறிப்பிட்ட சமுதாயத்தினர் பச்சை குத்தும் தொழிலை செய்து வந்த நிலையில் தற்போது பச்சை குத்துதல் டாட்டூ என்ற நாகரீக பெயருடன் வலம் வருகிறது. தற்போது இளைஞர்கள் மத்தியில் இது ஒரு பழக்கமாகவே ஏற்பட்டு விட்டது.
இதில் கருப்பு கலர் மட்டும் பயன்படுத்துவதால் பெரிய பாதிப்பு ஏற்பட்டு விடப் போவதில்லை. ஆனால் பச்சை, சிவப்பு, நீலம் என்று பல்வேறு நிறங்களுக்கான பல வேதிப்பொருள் கலந்த பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இவை ரத்தத்துடன் கலந்து பல்வேறு நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. அதிலும் குறிப்பாக முதலில் தோல் ஒவ்வாமை நோய் ஏற்படும். இதனைத் தொடர்ந்து ரத்தத்தில் இந்த வேதிப்பொருட்கள் கலப்பதால் புற்றுநோய்க்கு இணையான பாதிப்பு ஏற்படும். மேலும் பல்வேறு நிறமிகள் பயன்படுத்தப்படுவதால் அவை ரத்தத்துடன் கலந்து பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். அவர்கள் பயன்படுத்தும் ஊசியால் தொற்றுநோய் கூட பரவும் வாய்ப்பு உள்ளது. மேலும் ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து இம்மாதிரியான பச்சை குத்திக் கொள்ளும் நிலையில் அவற்றை அழிப்பதற்கு லேசர் முறை சிகிச்சைதான் மேற்கொள்ள வேண்டும். அதற்கு ரூ.10ஆயிரம் வரை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். பொதுவாக உடலில் மையிடுவதற்குமுன் அது பற்றி சிந்தித்து முடிவெடுப்பது அவசியம்.
பல்வேறு நிலைகளில் பாதிப்பு
விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி நரம்பியல் நிபுணர் டாக்டர் வெங்கடேஸ்வரன்:-
டாட்டூ போடும் பழக்கம் இளைஞர்களிடையே அதிகரித்துவிட்டது. தோலில் நானோ வகையை சேர்ந்த மிக நுண்ணிய நரம்புகள் உள்ளன. இந்த நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு கண் விழித்திரையை பாதிக்கிறது. மேலும் டாட்டூ போடும்போது சிலருக்கு அதில் ஏற்படும் வலியால் வலிப்பு நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
சுகாதாரமற்ற ஊசியை பயன்படுத்துவதால் நோய் தொற்றுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் பயன்படுத்தப்படும் பல்வேறு நிறமிகளாலும் நோய் பாதிப்பு ஏற்படும். மொத்தத்தில் டாட்டூ உடல் ஆரோக்கியத்தை பல்வேறு நிலைகளில் பாதிக்கும் என்பது மட்டும் உறுதி.
ரூ.45 ஆயிரம் வருமானம்
திருத்தங்கலில் டாட்டூ கடை நடத்தி வரும் மணிகண்டன்:-
டிப்ளமோ சிவில் என்ஜினீயரிங் வரை படித்த எனக்கு படித்த படிப்புக்கு வேலை கிடைக்க வில்லை. நண்பர்களின் ஆலோசனையின் பேரில் டாட்டூ கலை பயிற்சி பெற்றேன். 6 மாத கால பயிற்சிக்கு பின்னர் தனியாக டாட்டூ போட்டுவிட முடிவு செய்து அதற்கான நிறுவனத்தை தொடங்கினேன். ரூ.1 லட்சம் செலவில் நிறுவனம் தொடங்கி தற்போது தினமும் குறைந்தது ரூ.1,500 முதல் ரூ.2 ஆயிரம் வரை வருமானம் ஈட்டி வருகிறேன். இளைஞர்களிடம் டாட்டூவுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் பணி இரவு வரை நேரம் ஒதுக்கி டாட்டூ போட்டு வருகிறேன். தினமும் 10 மணி நேரம் வேலை நேரமாக இருக்கிறது. அனைத்து செலவுகளும் போக மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் கிடைத்து வருகிறது. படித்து விட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் என்னை போல பலர் இந்த தொழிலில் தற்போது ஆர்வமாக ஈடுபட்டு வருகிறார்கள். சிவகாசி, திருத்தங்கல் பகுதியில் மட்டும் தற்போது 200-க்கும் அதிகமானவர்கள் டாட்டூ போடும் வேலையை செய்து வருகிறார்கள்.
வலி இல்லை
ராஜபாளையத்தைச் சேர்ந்த விஷ்ணு:-
உடலில் டாட்டூ குத்துவது மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. ஏனென்றால் பெற்றோர்கள் நினைவாக அவர்களின் பெயர்களை குத்துவது, நமக்கு பிடித்த தெய்வங்களை நினைத்து குத்துவது நடைமுறையில் உள்ளது.
டாட்டூவுக்கு இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது. நான் உடலில் ஓம் என்ற எழுத்தும், தாய் தந்தை என்பதை ஆங்கில வார்த்தையிலும், குத்துச்சண்டை வீரர் ரோமன் ரேஞ்ச் அவருடைய அடையாளத்தையும் டாட்டூவாக குத்தி உள்ளேன். தற்போது இளைஞர்கள் உடலில் பச்சை குத்துவதை மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர். சிலர் மட்டுமே பயத்தில் பச்சை குத்துவதை தவிர்த்து வருகின்றனர். பச்சை குத்துவதால் உடலில் எந்த விதமான வலியும் இருக்காது.
ஜல்லிக்கட்டு காளை
வடகரை கிராமத்தை சேர்ந்த மகேந்திரன்:-
காரியாபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக ஆவியூர் கிராமத்தில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
இதனால் இந்த கிராமத்தை சேர்ந்த பல இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளை கையில் டாட்டூ வரைந்து உள்ளனர். மேலும் முடுக்கன்குளம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வாலிபர் ஜல்லிக்கட்டு போட்டியின் போது மாடு முட்டி இறந்து விட்டார். இவரின் நினைவை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டு காளை மற்றும் அவருடைய படத்தையும் வரைந்து உள்ளனர்.
நினைவுகளின் வெளிப்பாடு
ராஜபாளையத்தில் டாட்டூ கடை நடத்தி வரும் காயத்ரி தேவி கூறியதாவது:-
முன்னோர்கள் காலத்திலிருந்து தற்போது வரை பச்சை குத்துதல் என்பது தொடர்ந்து இருந்து வருகிறது. தற்போது அது டாட்டூ என பெயர் மாற்றப்பட்டு இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் ஒருவரின் உணர்ச்சி கலந்த பாசத்தை வெளிப்படுத்தவும். மற்றவர்களிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்தி காட்டவும், நினைவுகளின் வெளிப்பாடாகவும், தன்னம்பிக்கை அதிகரிக்கவும் மன அழுத்தத்தை குறைக்கும் கருவியாக செயல்படுகிறது.
டாட்டூ வரைந்து 12 மணி நேரம் கழித்து பரிசோதனைக்கு பின்பு ரத்ததானம் செய்யலாம். பாதுகாப்பான முறையில் டாட்டூ குத்துவதால் எவ்வித பிரச்சினையும் ஏற்படாது.
மனதில் உற்சாகம்
ஸ்ரீவில்லிபுத்தரை சேர்ந்த மருது:-
ஒப்பந்தக்காரரான நான் 3 ஆண்டுகளுக்கு முன்பு கையில் சிங்கம் படமும், மார்பில் நேதாஜியின் படமும் டாட்டூ குத்தி உள்ளேன். அந்த சமயத்தில் லேசான வலி இருந்தது.
அன்றைய தினம் மட்டும் காய்ச்சல் வராமல் இருக்க காய்ச்சல் மாத்திரை மட்டும் எடுத்துக் கொண்டேன். மறுநாள் வலி தீர்ந்து விட்டது. டாட்டூ பார்க்கும் போது மனதில் உற்சாகம் பிறக்கும். எனவேதான் இந்த சிங்கம் படத்தை வரைந்து உள்ளேன். இளைஞர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் டாட்டூ அமைந்துள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வலி, வேதனை கலந்த டாட்டூ
டாட்டூ மோகம் இளைஞர்களை ஆட்டிப்படைக்க சினிமா நடிகர், நடிகைகள் முக்கிய காரணம் என்றாலும் இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் தங்கள் அன்பை குறிப்பாக காதலை வெளிப்படுத்த டாட்டூ குத்திக்கொண்டு சிக்கலிலும் சிக்கி கொள்கிறார்கள். தங்களின் காதலன், காதலி பெயரை உடலில் டாட்டூவாக குத்திக்கொண்டு பின்னர் காதல் கைகூடாத போது அந்த டாட்டூவை அழிக்க முடியாமல் இன்னலுக்கு உள்ளாகிறார்கள். லேசர் தெரபி எனப்படும் சிகிச்சை மூலம் டாட்டூவை அழித்து விடலாம் என்றாலும், வலியும், வேதனையும், அதை அழிக்கும் சிகிச்சை முறையால் நோய் பாதிப்பு என்றும் ஆபத்துகள் அதிகமாகவே உள்ளதை இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும். மேலும் வெளிநாடுகளில் உள்ளதை போன்று டாட்டூ மையங்களுக்கு அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட நடவடிக்கை எடுத்தால் நோய் பாதிப்பில் இருந்து டாட்டூ போட்டு கொள்பவர்கள் தப்பிக்கும் வாய்ப்பும் உள்ளது.









