'டாட்டூ'-இளைஞர்களின் பச்சைகுத்தும் மோகம் அழகானதா? ஆபத்தானதா?
‘டாட்டூ’-இளைஞர்களின் பச்சைகுத்தும் மோகம் அழகானதா? ஆபத்தானதா? என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாட்டூ. இந்த சொல் இன்றைய இளைஞர்களின் மந்திர சொல்லாக மாறி வருகிறது. ஆன்ட்ராய்டு போன் இல்லாத இளைஞர் ஒருவரை கூட காண முடியாது என்ற ரீதியில் தான் இன்றைய டாட்டூ மோகமும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
பச்சை குத்துதல்
நமது தாத்தா, பாட்டி போன்ற மூதாதையர்கள் காலத்தில் பச்சை குத்திக்கொள்வது என்பது நம் நாட்டின் பாரம்பரிய பழக்க வழக்கங்களில் ஒன்றாக இருந்துள்ளது. குறிப்பாக அந்த காலத்து பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறக்கூடாது என்பதற்காக அதை கைகளில் பச்சை குத்திக்கொள்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். யாராவது கணவர் பெயரை கேட்டால் அந்த கால பெண்கள் கையை காட்டுவார்கள்.
இது மாற்றம் பெற்று அடுத்து வந்த காலக்கட்டங்களில் கணவர் பெயரை பச்சை குத்தும் நடைமுறை சடங்கு, சம்பிரதாயமாக மாறி போய் இருந்தது. பின்னர் படிப்பறிவு, நாகரிக வளர்ச்சியால் பழங்கால பச்சை குத்தும் மரபு குறைய தொடங்கியது. பெண்கள் தங்கள் கணவர் பெயரை கூறுவதற்கு தயக்கம் காட்டும் நிலை கடந்து போனது. இவ்வாறு பழங்கால பச்சை குத்தும் நடைமுறை குறைந்து போன அதேவேளையில், அது இன்றைக்கு கால மாற்றத்தில் மேற்கத்திய கலாசாரம் என்ற பெயரில் டாட்டூவாக புது வடிவம் பெற்று விட்டது.
நடிகர், நடிகைகள்
இந்தியாவில் பிரபலமாக பல பாலிவுட் பிரபல நடிகர், நடிகைகள் தங்கள் காதலர்கள் பெயரை டாட்டூவாக குத்திக்கொண்டது டாட்டூவின் மீது இளைஞர்கள் குறிப்பாக இளம்பெண்களின் கவனத்தை ஈர்க்க ெதாடங்கியது என கூறலாம். இன்றைய காலக்கட்டத்தில் கிரிக்கெட், கால்பந்து விளையாட்டு வீரர்கள் என்று பலரும் டாட்டூ குத்திக்கொண்டு டாட்டா காட்டுவது ஒரு ஸ்டைலாக தான் மாறி விட்டது.
குறிப்பாக இளம்பெண்கள் தங்கள் அழகுக்கு அழகு சேர்க்க ெமகந்தி இடுவதையும், டாட்டூஸ் (பச்சை குத்துதல்) வரைந்து கொள்வதையும் நாகரிகத்தின் அடையாளமாக பார்க்கிறார்கள். முதலில் பெயரை மட்டுமே டாட்டூஸ் குத்திய இளைஞர்கள், இளம்பெண்கள் தற்போது கை, கால் தொடங்கி உடலில் பல்வேறு இடங்களில் விதவித வண்ணங்களில் டாட்டூஸ் வரைவது தற்போது பேஷனாகி விட்டது.
அழகானதா? ஆபத்தானதா?
இந்த டாட்டூ குத்துவது பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை செய்கின்றனர். டாட்டூ கிரைன்லோமா, டாட்டூ ட்யூபர்க்ளோசிஸ், டாட்டூ சர்காயடேசிஸ், பங்கல் இன்பெக்ஷன் போன்ற பல விதமான தோல் நோய்கள் இந்த டாட்டூவால் உருவாகும் வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இளைஞர்களின் டாட்டூஸ் மோகம் அழகானதா? அல்லது ஆபத்தானதா? என்று வாலிபர்கள், டாக்டர் கூறிய கருத்துளை காண்போம்.
மகிழ்ச்சியானதாக உள்ளது
செங்குந்தபுரத்தை சேர்ந்த செந்தில்குமார்:- எனது தந்தை அவருக்கு பிடித்தமான அரசியல் தலைவரின் பெயரை கையில் பச்சை குத்தி இருந்தார். சிறுவயதில் நான் அதை பார்க்கும்போது கம்பீரமான விஷயமாக எனக்கு தெரியும். இப்போது நான் எனது மனைவியின் பெயரை பச்சை குத்திக்கொண்டேன். முந்தைய காலங்களை போன்று அதிக வலியுள்ள முறையில் இல்லாமல் எலக்ட்ரானிக் கருவி மூலம் குறைந்த அளவு வலியோடு டாட்டூ போட்டுக் கொள்வது பாதுகாப்பானதாக உள்ளது. மேலும் அந்த காலத்தை போல் குறிப்பிட்ட சில பெயர் அல்லது படங்களை மட்டும் வரையாமல் தற்போது நாம் மனதில் என்ன நினைக்கிறோமோ? அதை அப்படியே படமாக டாட்டூ போட்டுக் கொள்ளலாம். அதற்கு ஏற்றாற்போல் இப்போது வசதிகள் வந்துவிட்டது. இது நமக்கு மட்டும் மகிழ்ச்சியாக இல்லாமல், நம்மோடு இருப்பவர்களுக்கும் மகிழ்ச்சியான விஷயமாக இருக்கும்.
மிகவும் விரும்புகின்றனர்
தா.பழூரை ேசர்ந்த டாட்டூ வரையும் கலைஞர் ரஞ்சித்குமார்:- டாட்டூ வரைந்து கொள்வதற்கு வயது வித்தியாசம் இல்லாமல் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வருகின்றனர். ஆண்களும், பெண்களும் தற்போதைய காலத்தில் டாட்டூ போட்டு கொள்வதற்கு மிகவும் விரும்புகின்றனர். டாட்டூ காலத்தால் அழியாமல் நம் உடலோடு ஒட்டியிருக்கும். மனதில் உள்ள விஷயம் கடைசி வரை மறையாமல் பசுமையாக உடலோடு இருப்பது, மகிழ்ச்சியான ஒரு விஷயமாக டாட்டூ போட்டுக் கொள்பவர்களால் பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது அழிந்து வரும் பல கலைகளில் நமது பாரம்பரிய கலையான பச்சை குத்துதல் கலை, டாட்டூ என்ற பெயரில் தற்போது உயிர்ப்போடு இருப்பது எங்களை போன்ற கலைஞர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.
நோய் தொற்றுகள் ஏற்படும்
பெரம்பலூர் சுந்தர்நகரை சேர்ந்த தோல்நோய் சிறப்பு மருத்துவநிபுணர் டாக்டர் சங்கீதாஅன்பரசு:- டாட்டூஸ் இட்டுக்கொள்வதால் உடலில் பாக்டீரியா, வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. டாட்டூஸ் வரைபவர்கள் பயன்படுத்தும் ஊசி, அச்சு(சீல்) மற்றும் உபகரணங்கள் முறையாக கிருமிகள் தொற்று ஏற்படாதவாறு ஸ்டெரலைஸ் செய்யப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு ஸ்டெரலைஸ் செய்யப்படவில்லை என்றால், காசநோய், எச்.ஐ.வி. ஹெபாடைடிஸ், சிபிலிஸ், கீலாய்டு, கார்கைடைல்ஸ் போன்ற நோய் தொற்றுகள் ஏற்படும். திருமணமான இளம் வயதினராக இருந்தால், தம்பதியினர் டாட்டூஸ் இட்டுக்கொள்வதன் மூலம் ஏற்படும் நோய்த்தொற்று, அடுத்த சந்ததியினரையும் மரபு வழியாக சென்றடைந்து உடலியல் பாதிப்பை ஏற்படுத்தும். கையுறை, தரமான மை ஆகியவற்றை பயன்படுத்தாவிட்டாலும் உடல் அரிப்பு, ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும். ரத்தம் சம்பந்தமான பாதிப்புகளும், நோய்க்கிருமிகள் தொற்றும் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. பச்சை குத்த பயன்படுத்தும் மை, சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும், சிலருக்கு தோலில் அரிப்பு, பூஞ்சை நோய் தொற்றுக்கான காரணமாக அமையும். தழும்புகளும் உருவாகக்கூடும். மரபு காரணிகள் (ஜீன்) காரணமாகவும் மரு, மங்கு, பூஞ்சை தொற்றுகள் ஏற்படலாம். உடலில் டாட்டூ குத்திக்கொள்வது ஒருவகையான பேஷனாக உள்ளது. சினிமா நட்சத்திரங்கள் டாட்டூஸ் இட்டுக்கொள்வதை நவநாகரிகமாக கருகின்றனர். முகத்தில் வெண்புள்ளியை மறைக்க டாட்டூஸ் குத்திக்கொள்கின்றனர். பெண்கள் தங்களது அழகை மேம்படுத்திக்கொள்ள தரமான மெகந்தியை குழைத்து இட்டுக்கொள்வது ஒருவகையில் ஏற்புடையதாக இருப்பினும், டாட்டூஸ் எந்தவகையில் குத்திக்கொண்டாலும், உடலுக்கு நல்லதல்ல. ஆகவே டாட்டூஸ் இட்டுக்கொள்வதை ஆண்களும், பெண்களும் தவிர்ப்பது நல்லது.
தவிர்க்க வேண்டும்
அரியலூரை சேர்ந்த நவீன்:- முன்பு பச்சை குத்துவது என்பது மரபாகவும், அன்பை வெளிப்படுத்துவதாகவும் இருந்தது. பெரும்பாலும் தங்களுக்கு பிடித்தவர்களின் பெயரை பச்சை குத்தி வந்தனர். தற்போது இளைஞர்கள் மத்தியில் டாட்டூ என்பது ஒரு ஈர்ப்பையும், மோகத்தையும் உருவாக்கி உள்ளது. பெயரை தாண்டி தங்களுக்கு பிடித்தமான தலைவர்கள், நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள், நடிகைகள் போன்றவர்களின் உருவங்களை டாட்டூவாக வரைந்து வருகின்றனர். மேலும் தங்களது ராசிக்கு தகுந்தவாறு விலங்குகளின் முகங்கள், கடவுளின் படங்களை வரைந்து வருகின்றனர். பலர் தங்களது உடலில் பல பகுதிகளில் பலவித டாட்டூக்களை வரைந்துள்ளனர். பெரும்பாலும் இது உடலுக்கு நல்லதா, கெட்டதா என்று அறியாமல் செய்து வருகின்றனர். டாட்டூ போட்டுக்கொள்வதால் பல்வேறு விதமான சரும தோல் நோய்கள் பாக்டீரியாக்கள் மூலம் ஏற்பட வாய்ப்புள்ளது. தோல் வீக்கம், நிறம் மாறுதல் ஆகியவையும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவ துறையினரால் கூறப்படுகிறது. எனவே உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் டாட்டூ வரைவதை தவிர்ப்பதே நல்லது.
என்றும் அழியாது
அரியலூரை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் விஜயராணி:- முன்பு பச்சை குத்துதல் என்பது பாரம்பரிய வழக்கமாக இருந்து வந்தது. ராஜாக்கள் தங்களது குல தெய்வங்களின் பெயர்களையும், உருவங்களையும் பச்சை குத்தி வந்தனர். காலப்போக்கில் நரிக்குறவர்கள் பச்சை குத்துவதை தொழிலாக கொண்டு இருந்தனர். இந்தியாவில்தான் பச்சை குத்தும் வழக்கம் இருந்தது. தற்போது உலகெங்கிலும் டாட்டூ என்ற பெயரில் பரவி உள்ளது. பலவகை வண்ணங்களில் உடல் முழுவதும் டாட்டூ வரைந்து கொள்வது ஒரு பேஷனாக உள்ளது. மேலும் இயற்கையான புருவங்கள் இல்லாதவர்களுக்கு மைக்ரோ பிளிடீங் முறையில் ஜ ப்ரோ வரையப்படுகிறது. ஐ லைனர், லிப்ஸ்டிக் போன்றவற்றை நிரந்தரமாக விரும்புபவர்கள் உள்ளனர். இது ஒரு வகையான டாட்டூ. டாட்டூவில் தற்போது எண்ணற்ற வகைகள் வந்துள்ளன. இன்னும் புதுமைகள் வந்து கொண்டேதான் உள்ளன. இது மேலும் வளர்ச்சியை நோக்கி செல்லுமே தவிர மறைவதற்கு வாய்ப்பில்லை. இதனை வயது வித்தியாசம் இன்றி அனைவரும் விரும்புகின்றனர்.