பச்சை குத்திக்கொண்ட கல்லூரி மாணவர் சாவு
குன்னம் அருகே பச்சை குத்திக்கொண்ட கல்லூரி மாணவர் ஒவ்வாமையால் பரிதாபமாக இறந்தார்.
கல்லூரி மாணவர்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள மூங்கில் பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி தனுஷ்கோடி. இவர்களது மகன் பரத் (வயது 22). இவர் எம்.ஏ. படித்து வந்தார். மேலும் விவசாய பணிகளையும் செய்து வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பரத் தனது நண்பர்களுடன் பாண்டிச்சேரிக்கு சுற்றுலா சென்றார். அங்கு பரத் மற்றும் அவரது நண்பர்கள் பச்சை குத்திக்கொண்டனர். இதில், பரத் கழுத்து பகுதியில் நங்கூரம் படத்தை பச்சை குத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பரத்திற்கு பச்சை குத்திய பின்னர் ஒவ்வாமை ஏற்பட்டு காய்ச்சலால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. மேலும் அவரது கழுத்து பகுதியில் கட்டி ஏற்பட்டு சீல் பிடித்தது.
சாவு
இதையடுத்து, அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றார். 2 நாட்கள் கழித்து அங்கு அறுவை சிகிச்சை செய்து கட்டியை அகற்றினர். மேலும் பரத் அரசு மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்ப கூறினர். அதன்படி பரத் மருந்தகத்திற்கு சென்று மாத்திரைகள் வாங்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மயங்கி பரத் கீழே விழுந்தார்.
இதில், தலை, மூக்கு, வாயில் அடிபட்டு பற்களும் கொட்டின. உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரத் பரிதாபமாக இறந்தார். இதனால் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.