'கியூ ஆர்' கோடு மூலம் வரி வசூல்
‘கியூ ஆர்’ கோடு மூலம் வரி வசூல்
ஆனைமலை
ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர், ஒடையகுளம் ஆகிய பேரூராட்சிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு மறுசீராய்வு செய்த பிறகு புதிய வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி பொதுமக்களிடம் இருந்து சொத்து, குடிநீர், தொழில் உள்ளிட்ட வரிகளை வசூல் செய்ய புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டது. அதில் வரி விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதன் மூலம் வரி வசூல் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் பலரும் அலுவலகத்துக்கு நேரடியாக வந்து வரி செலுத்தி ரசீது பெறுகின்றனர். கூட்டம் அதிகமாகும்போது, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதை தவிர்க்க வேட்டைக்காரன்புதூர் பேரூராட்சியில் கியூ ஆர் கோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆன்லைன் மூலம் வரி செலுத்தும் வசதி இருந்தாலும், இந்த புதிய வசதி பொதுமக்களை கவர்ந்துள்ளது. இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் கூறும்போது, கியூ ஆர் கோடு மூலம் வரி செலுத்தும் பொதுமக்களின் வீடுகளுக்கே சென்று பேரூராட்சி ஊழியர்கள் மூலம் ரசீது வழங்கப்படுகிறது. மற்ற பேரூராட்சிகளிலும் இந்த வசதி வரும் நாட்களில் ஏற்படுத்தப்படலாம் என்றார்.