ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம்
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.
பணி பாதுகாப்பு
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழ்நாட்டில் பொருளாதரத்தில் பின்தங்கிய ஏழை எளிய நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் கல்வி அறிவு பெறுவதில் அரசுப்பள்ளிகள் முக்கிய அங்கம் வகிக்கிறது. பள்ளிக்கல்வித்துறையின் கீழ் 37,459 அரசு பள்ளிகளும், 8,357 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்படுகின்றன. இதில் சுமார் 2.5 லட்சத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். சமீபகாலமாக ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு சற்று தடுமாற்றத்துடன் செல்கிறது.
மாணவர்கள் மற்றும் அந்நியர்களால் ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகுவதால் மருத்துவர்களை போல ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புக்கு அரசு உத்தரவிடவேண்டும். ஆசிரியர்கள் சில சமூகவிரோதிகளால் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். ஆசிரியர்களை பள்ளி வளாகத்திற்குள்ளே சென்று தாக்கிய சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.
ஆசிரியர்கள் மீது தாக்குதல்
சில இடங்களில் ஆசிரியர்கள் மீது வீண் பழிசுமத்தப்படுவதும், அதனால் ஆசிரியர்கள் தாக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகின்றன. உண்மையிலேயே தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுப்பதை வருவேற்கும் அதேநேரத்தில் பொய்யான குற்றச்சாட்டால் பாதிக்கப்படும் ஆசிரியர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் தவறான பாதைக்கு செல்லும் குழந்தைகளை கூட நல்வழிபடுத்த ஆசிரியர்கள் அச்சப்படுகின்றனர். அவற்றை ஆராய்ந்து அதை சீராக்க கல்வித்துறை முன் வரவேண்டும். படிப்பில் பின் தங்கிய மாணவர்களை கண்டித்ததற்காக ஆசிரியர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டுகள் கூறுவதும், சில அரசியல் காரணங்களுக்காகவும் பல்வேறு ஆசிரியர்கள் பாதிக்கப்படுவதும் தொடர் கதையாகி வருகிறது. சில நேரங்களில் விசாரணையின்றி ஆசிரியர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார்கள். இதனால் கற்றல் கற்பித்தலில் பெரிய பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலைகளை மாற்றுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை மையங்களை பள்ளிகளில் நிறுவ வேண்டும்.
நீதிபோதனா வகுப்பு
மதிப்பெண் எடுப்பதை முக்கியமாக கருதாமல் சிந்தனைகளை தூண்டும் வகையில் பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும். மேலும் மாணவர்கள் விளையாட்டு மைதானங்களில் செலவிடும் நேரத்தை அதிகரிக்கவேண்டும். ஆசிரியர்கள் அச்சமில்லாமலும், மனநிறைவுடனும் பணியாற்ற ஏதுவாக தமிழக மருத்துவர்களுக்கு உள்ளதுபோல் பணிபாதுகாப்பு சட்டத்தை ஆசிரியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். மேலும் மாணவர்களுக்கு நீதிபோதனா வகுப்புகளை கட்டாயமாக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.