மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை; பள்ளியை பொதுமக்கள் முற்றுகை


மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை; பள்ளியை பொதுமக்கள் முற்றுகை
x

மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்ததை கண்டித்து பள்ளியை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

பெரம்பலூர்

குன்னம்:

பாலியல் தொல்லை

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே பெரியம்மாபாளையம் கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 160-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படித்து வருகின்றனர். இப்பள்ளியில் 8 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரியர் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து கிராம மக்கள் முன்னிலையில் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அந்த ஆசிரியரை கண்டித்துள்ளனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பள்ளியை முற்றுகை

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக பள்ளியில் பயிலும் சில மாணவிகளிடம், அந்த ஆசிரியர் வகுப்பறையில் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர்களிடம், அந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் புகார் கொடுத்துள்ளனர். மேலும் நேற்று பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பொதுமக்கள் சார்பில் தொலைபேசி வாயிலாக குழந்தைகள் நல பாதுகாப்பு அலகுக்கு தகவல் கொடுக்கப்பட்டு, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ராமு, மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆற்றுப்படுத்துனர் மகேஸ்வரி ஆகியோர் அந்த பள்ளிக்கு வந்து மாணவிகளிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த ஆசிரியர், மாணவிகளிடம் தவறான தொடுதல், தவறான பார்வை மற்றும் குறிப்பிட்ட மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு நன்னடத்தை அலுவலர் கோபிநாத், பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story