ஆசிரியர்கள் பாட குறிப்பேடுகளை மட்டும் பராமரித்தால் போதும் - கல்வித்துறை உத்தரவு


ஆசிரியர்கள் பாட குறிப்பேடுகளை மட்டும் பராமரித்தால் போதும் - கல்வித்துறை உத்தரவு
x
தினத்தந்தி 24 Aug 2022 1:30 AM IST (Updated: 24 Aug 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

பாடத்திட்டம், பணிசெய் பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை பாட குறிப்பேடுகளை மட்டும் பராமரித்தால் போதும் என கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

ஆசிரியர்களுக்கு தேவையற்ற நிர்வாக பணி சுமையை குறைத்து, அவர்களுடைய பணி நேரத்தை மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிக்காக முழுமையாக செலவிடும் வகையில், கல்வித்துறை சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.

அதன்படி, 2021-22-ம் கல்வியாண்டிற்கான பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் பள்ளி பதிவேடுகளை கணினி மயமாக்கப்படும் என்றும், தேவையற்ற பதிவேடுகள் நீக்கம் செய்யப்படும் என்றும் அறிவித்தார்.

அந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், கருவூல பதிவேடுகள், அபராத தொகை பதிவேடு உள்பட 11 பதிவேடுகளை நீக்கம் செய்து உத்தரவிட்டிருப்பதோடு, 81 பதிவேடுகளை எமிஸ் இணையதளம் வாயிலாக பராமரிக்கவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் அந்த உத்தரவில், எண்ணும், எழுத்தும் திட்டத்தை செயல்படுத்தும் 1, 2 மற்றும் 3-ம் வகுப்பு ஆசிரியர்கள் பாடக்குறிப்பேடு (நோட் ஆப் லெசன்) மட்டும் பராமரித்தால் போதுமானது. இதைத்தவிர வேறு எந்த ஒரு பதிவேட்டையும் பராமரிக்க தேவையில்லை.

அதுபோல் 4-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாட ஆசிரியர்களும் பாட குறிப்பேடு மட்டும் பராமரித்தால் போதுமானது. பாடத்திட்டம் (லெசன் பிளான்), பணிசெய் பதிவேடு (ஒர்க் டன் ரெஜிஸ்டர்) ஆகிய பதிவேடுகளை பராமரிக்க தேவையில்லை என்றும் கல்வித்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் அரசு பள்ளி ஆசிரியை ஒருவர், கல்வித்துறை சார்ந்த பணிகள் அதிகமாக இருக்கிறது என்றும், இதனால் வீட்டுப் பணிகளை சரியாக கவனிக்க முடியவில்லை என்றும் தன்னுடைய குமுறலை வீடியோவாக பதிவிட்டு இருந்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகியது. இந்த வீடியோவை தொடர்ந்து கல்வித்துறை இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Related Tags :
Next Story