ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூரில் தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்) சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவருமான ஒய்.ஆர்.செல்வராஜ் தலைமை தாங்கினார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளரும், டிட்டோஜாக் ஒருங்கிணைப்பாளருமான அருள்ஜோதி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளரும், ஒருங்கிணைப்பாளருமான சின்னசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திரளான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தொடக்க கல்வித்துறையில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள், தொடர்ந்து ஆசிரியர்களின் கற்றல் பணி பாதிக்கும் வகையில் இ.எம்.ஐ.எஸ். செயலியில் பல்வேறு பதிவேற்றங்களை செய்யும் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை கண்டிப்பது. இதுபோன்ற பதிவேற்ற பணிகளில் இருந்து தொடக்க பள்ளி ஆசிரியர்களை முழுமையாக விடுவிக்க வேண்டும். சி.ஆர்.சி. பயிற்சிகள் மற்றும் பிற பயிற்சிகளுக்கான ஏதுவாளர்களாக ஆசிரியர்கள் பயன்படுத்தப்படுவதால், கற்றல் கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே வார விடுமுறை நாட்களில் பயிற்சி அளிப்பதை கைவிட வலியுறுத்துவது. பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தை மாதாமாதம் கூட்டாமல், ஆசிரியர்களின் நலன்கருதி 3 மாதத்திற்கு ஒருமுறை கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.