ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிகளை வழங்கக்கூடாது


ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிகளை வழங்கக்கூடாது
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கற்பித்தல் பணி தடைபடுவதால் ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிகளை வழங்கக்கூடாது என தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

சிவகங்கை

கூடுதல் பணி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ரெங்கராஜன், தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- 2023-24-ம் கல்வி ஆண்டின் இரண்டாம் பருவ கற்பித்தல் பணிகள் நடுநிலைப்பள்ளிகளில் கடந்த 3-ந்தேதியும், தொடக்கப்பள்ளிகளில் 9-ந் தேதியும் தொடங்கியது. நேற்றுவரை பள்ளிகளில் கற்பித்தல் பணியை முழுமையாக தொடங்க முடியவில்லை.

ஆசிரியர்களுக்கு பல்வேறு கூடுதல் பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளதால் கற்பித்தல் பணி தொடங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. கல்வித்துறையால் வழங்கப்படும் இத்தகைய பயிற்சிகளால் ஒவ்வொரு பள்ளியிலும் இரண்டுக்கும் மேற்பட்ட ஆசிரியர்களோ அல்லது குறைந்தது ஒரு ஆசிரியரோ, பள்ளியை விட்டு வெளியில் செல்ல வேண்டி உள்ளது.

கலை திருவிழா 

இதன் காரணமாக பள்ளிகளில் குறைந்த ஆசிரியர்களை கொண்டு கற்பித்தல் பணி மேற்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் இரண்டாம் பருவ கற்றல் அடைவுகள் கேள்விக்குறியாக உள்ளது. தற்போது தமிழகத்தின் கல்வி நிலை 23-வது இடத்தில் உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தின் கல்வி நிலை கடைசி இடத்திற்கு சென்றுவிடும்.

மேலும், பள்ளிகளில் பருவத்திட்ட பாடப்பொருள் கற்பித்தல் பணி நிறைவடைந்த பின்னரே கலை திருவிழாக்கள் நடத்துவது வழக்கம். ஆனால் கற்பித்தல் பணி தொடங்கும் நாட்களிலேயே கலைத்திருவிழாக்களையும் நடத்துவது பொருத்தமானதாக இருக்காது.

நிறுத்த வேண்டும்

சமீபகாலமாக கல்வி கற்பித்தல் பணியில், அதற்கு எதிரான அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகரித்திருப்பது ஏழை குழந்தைகளின் கல்வியை பாதிக்கும். எனவே, அரசு கல்வித்துறையில் முழுமையான கண்காணிப்பை செலுத்தி கல்வித்துறையையும், கற்பித்தல் பணியையும் மேம்படுத்த வேண்டும். கற்பித்தல் பணியில் ஏற்படுத்தப்படும் குறுக்கீடுகளை நிறுத்த வேண்டும். பள்ளிகளில் கற்பித்தல் பணி அல்லாத பிற பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நிலையினை கைவிட்டு தமிழக பள்ளிகளின் கற்பித்தல் நிலையை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story