விழுப்புரத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில்  இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் பாரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட செயலாளர் எழிலன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் கிருஷ்ணாபாய், மாவட்ட பொருளாளர் திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில தலைவர் செல்லையா சிறப்புரையாற்றினார். தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள 3 சதவீத அகவிலைப்படியை தமிழக அரசு வழங்க வேண்டும், புதிய கல்விக்கொள்கை திட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமையை தமிழக அரசு வழங்க வேண்டும், தமிழக பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 ஆசிரியர் பணியிடங்கள் மதிப்பூதியத்தில் ஆசிரியர் நியமனம் என வெளியிட்ட அரசாணையை திரும்பப்பெற்று தகுதி வாய்ந்த ஆசிரியர்களை நிரந்தர பணியிடத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழக மாநில சிறப்பு தலைவர் அண்ணாமலை, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சண்முகசாமி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் அருமுத்து வள்ளியப்பா, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் குருமூர்த்தி, தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில இணை செயலாளர் ஸ்டீபன், மாவட்ட செயலாளர் ஆரோக்கியதாஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைமையிட செயலாளர் ஜெயப்பிரகாஷ் நன்றி கூறினார்.


Next Story