பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தல்


பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும்-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தல்
x

பள்ளியில் ஆசிரியருக்கு பிறந்தநாள் கொண்டாடிய விவகாரம் தொடர்பாக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் வலியுறுத்தி உள்ளனர்.

கரூர்

பணியிடை நீக்கம்

குளித்தலை ஊராட்சி ஒன்றியம் பொய்யாமணி ஊராட்சிக்குட்பட்ட பங்களாபுதூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியரான மணிகண்டனுக்கு கடந்த வாரம் பிறந்தநாள் என்பதால் அப்பள்ளியில் அவருக்கு மாணவர்கள் சார்பில் கேக் வெட்டப்பட்டது. அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ராதேவி உள்பட ஆசிரியர்கள், மாணவர்கள் ஆசிரியர் மணிகண்டனுக்கு கேக் ஊட்டியுள்ளனர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்தநிலையில் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் பங்களாபுதூர் பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ராதேவி, ஆசிரியர் மணிகண்டன் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

மனு

குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கரூர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் இக்கூட்டணியின் பொறுப்பாளர்கள் நேற்று முன்தினம் மாலை மனு அளிக்க வந்தனர். அப்போது மாவட்ட கல்வி அலுவலர் இல்லாத காரணத்தினால் அவர் வரும் வரையில் சில மணிநேரங்கள் காத்திருந்து இரவு அவர் வந்த பின்னர் அவரிடம் தங்களது மனுவினை அளித்தனர். இதுகுறித்து இக்கூட்டணியின் மாவட்ட செயலாளர் மணிகண்டனிடம் கூறியதாவது:-

பங்களாபுதூர் பள்ளியின் தலைமை ஆசிரியை சித்ராதேவி, ஆசிரியர் மணிகண்டன் ஆகியோர் அப்பள்ளி மற்றும் பள்ளி மாணவர்களின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர்.

உண்மை தன்மையை அறிய வேண்டும்

இதற்கிடையே, பள்ளி முடிந்த பின்னர் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் சேர்ந்து ஆசிரியர் மணிகண்டனுக்கு கேக் வெட்டி அவருக்கு ஊட்டியுள்ளனர். இது தொடர்பாக எந்த ஒரு புகாரும் கொடுக்கப்படவில்லை. எந்த ஒரு நேரடி விசாரணையும் செய்யாமல் வாட்ஸ் அப்பில் வந்த புகைப்படத்தை வைத்துக்கொண்டு குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன், தலைமையாசிரியர் சித்ராதேவி, ஆசிரியர் மணிகண்டன் ஆகியோரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.இந்த நிலையில் பங்களாபுதூர் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியோரிடம் குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் நேரடியாக சென்று விசாரணை செய்து உண்மை தன்மையை அறியவேண்டும்.

போராட்டம் நடத்தப்படும்

மேலும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்ட உத்தரவை ரத்து செய்து தலைமை ஆசிரியை சித்ரா தேவி, ஆசிரியர் மணிகண்டன் ஆகியோரை மீண்டும் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளிக்கப்பட்டது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட குளித்தலை மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஒரு வார காலத்திற்குள் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார். ஒரு வார காலத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிடில் போராட்டம்நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story