பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள்


பெரம்பலூர் மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கு நடந்த குழு விளையாட்டு போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பெரம்பலூர்

குழு விளையாட்டு போட்டிகள்

பாரதியார் தினம், குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் மாவட்ட அளவிலான 14, 17, 19 வயதுகளுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான குழு விளையாட்டு போட்டிகள் எளம்பலூர் இந்திரா நகரில் உள்ள தந்தை ரோவர் உயர்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. மாணவர்களுக்கு வாலிபால், கபடி, கால்பந்து, பூப்பந்தாட்டம் ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது.

போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். இதில் ஏற்கனவே பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, வேப்பூர் ஆகிய குறுவட்ட அளவில் நடத்தப்பட்ட மேற்கண்ட குழு விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடின.

அரசு பள்ளிகள் முதலிடம்

இப்போட்டிகளில் பூப்பந்தாட்ட போட்டியில் 14 வயது பிரிவில் வாலிகண்டபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும், 17 வயது பிரிவில் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி 19 வயது பிரிவில் உடும்பியம் ஈடன் கார்டன் மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பெற்றது. வாலிபால் போட்டியில் 14 வயது பிரிவில் சு.ஆடுதுறை அரசு மேல்நிலைப்பள்ளியும், 17 வயது பிரிவில் திருமாந்துறை ஆண்ட்ரூஸ் உயர்நிலைப்பள்ளி, 19 வயது பிரிவில் கீழப்புலியூர் அரசு மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பெற்றது. கால்பந்து போட்டியில் 14 வயது பிரிவில் கூத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், 17 வயது பிரிவில் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 19 வயது பிரிவில் மேலமாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியும் முதலிடம் பெற்றது.

கபடி போட்டியில் 14 வயது பிரிவில் அரும்பாவூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், 17 வயது பிரிவில் பூலாம்பாடி அரசு மேல்நிலைப்பள்ளி 19 வயது பிரிவில் வெங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பெற்றது.

பாராட்டு சான்றிதழ்

இதையடுத்து, போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்த அணிகளின் வீரா்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. முதலிடம் பிடித்த அணிகள் மாநில அளவிலான குழு விளையாட்டு போட்டிகளில் விளையாடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டிற்கான ஏற்பாடுகளை பள்ளி உடற்கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

தந்தை ரோவர் உயர்நிலைப்பள்ளியில் வருகிற 16-ந்தேதி மாணவிகளுக்கும், 18-ந்தேதி மாணவர்களுக்கும் ஹேண்ட் பால், கோ-கோ, எறிபந்து, ஆக்கி, கூடைப்பந்து, டென்னிஸ் ஆகிய குழு விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது.


Next Story