கலவரத்தை அடக்க 'டிரோன்' மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு


கலவரத்தை அடக்க டிரோன் மூலம் கண்ணீர் புகை குண்டு வீச்சு
x
தினத்தந்தி 8 May 2023 12:45 AM IST (Updated: 8 May 2023 8:43 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் கலவரத்தை அடக்க ‘டிரோன்’ மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசார் அசத்தினார்கள்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் கலவரத்தை அடக்க 'டிரோன்' மூலம் கண்ணீர் புகை குண்டு வீசும் ஒத்திகை நிகழ்ச்சியில் போலீசார் அசத்தினார்கள்.

ஒத்திகை நிகழ்ச்சி

கோவை மாநகர போலீஸ் பயன்பாட்டுக்கு தனியார் நிறுவன பங்களிப்புடன் 'டிரோன்கள்'(ஆளில்லா குட்டி விமானம்) வாங்கப்பட்டது. இந்த டிரோன்களில் சில மாற்றங்கள் செய்து, கலவர சூழல்களில் கூட்டத்தை கண்ணீர் புகை குண்டு வீசி கலைக்க பயன்படுத்தப்பட உள்ளது. இதன் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று கோவை பி.ஆர்.எஸ். போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், போலீசார் கலவரக்காரர்கள் போல ஒன்று கூடி போலீசாருக்கு எதிராக கோஷமிட்டு நடித்தனர்.

கண்ணீர் புகை குண்டுகள்

அப்போது 'டிரோன்' மூலம் அந்த இடத்தில் கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது. இதனால் அந்த பகுதியில் கடும் புகை மூட்டம் ஏற்பட்டது. உடனே கலவரக்காரர்கள் தலைதெறிக்க ஓடுவது போன்று போலீசார் தத்ரூபமாக நடித்தனர். இந்த ஒத்திகை நிகழ்ச்சி குறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

இந்த 'டிரோன்' மூலம் கலவரம் நடக்கும் பகுதிகளில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கூட்டத்தை கலைக்க முடியும். ஒரே நேரத்தில் 4 கண்ணீர் புகை குண்டுகளை வீச முடிவதுடன், 2 நிமிடத்தில் மாற்று கண்ணீர் புகை குண்டுகளை பொருத்தி கொள்ள முடியும். மேலும் இந்த 'டிரோன்'களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கோவையில் முதல் முறை

இதன் மூலம் கலவரம் செய்யக்கூடிய நபர்களை துல்லியமாக கண்டறிவதுடன், அவர்களை புகைப்படம் எடுக்க முடியும். ஓடி செல்பவர்களையும் 'டிரோன்' மூலம் பின் தொடர்ந்து சென்று அவர்களை புகைப்படங்கள் மற்றும் வீடியோ எடுக்க முடியும். தமிழகத்தில் போலீஸ் துறையில் 'டிரோன்கள்' பயன்படுத்தவது கோவையில்தான் முதல் முறை.இவ்வாறு அவர் கூறினார்.


Next Story