கோரிக்கை மனுக்களை கிழித்து எறிந்த மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினர்


கோரிக்கை மனுக்களை கிழித்து எறிந்த மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினர்
x

திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினரை கலெக்டரை சந்திக்க போலீசார் அனுமதிக்காததால் கோரிக்கை மனுக்களை கிழித்து எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டத்தின் போது மனு அளிக்க வந்த மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கத்தினரை கலெக்டரை சந்திக்க போலீசார் அனுமதிக்காததால் கோரிக்கை மனுக்களை கிழித்து எறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிப்காட்டிற்கு நிலம்

தமிழக அரசின் மூலம் கடந்த 2022-ல் திருவண்ணாமலை மாவட்டம் அனக்காவூர் ஒன்றியத்தில் மேல்மா சிப்காட் என்னும் பெயரில் 3174 ஏக்கர் நிலம் கையகப்படுத்துவதாக அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

இதன்மூலம் அந்த பகுதியை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் நன்செய் விளைநிலங்களை தவறாக தரிசு என்று வகைப்படுத்தி நிலம் கையகப்படுத்த உள்ளதாகவும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோரிக்கை மனுவை மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இதுகுறித்து ஒரு குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த குழுவும் மாவட்ட நிர்வாகத்தினர் ஏற்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. தற்போது சிப்காட்டிற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் மூலம் கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து 70 நாட்களாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பொதுமக்களை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

70 நாட்களாக போராட்டம்

இதனால் பாதிக்கப்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் திருவண்ணாமலை கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதையடுத்து இன்று அவர்கள் ஒரு கிராமத்திற்கு 5 பேர் வீதம் என 50-க்கும் மேற்பட்டவர்கள் மேல்மா சிப்காட் எதிர்ப்பு விவசாயிகள் இயக்கம் மூலம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர்.

அப்போது அவர்கள் தங்கள் பகுதியில் விளைவித்த காய், கனிகள், கரும்பு, நெல் போன்றவற்றை கொண்டு வந்தனர்.

மேலும் 70 நாட்களாக போராடும் எங்களை கண்டு கொள்ளாமல் உள்ள கலெக்டரிடம் எங்களின் குடியுரிமை சம்பந்தமான வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, விவசாய விளை பொருட்களை ஒப்படைத்து விட்டு எங்களை கருணை கொலை செய்து விட்டு விவசாய நிலங்களை கையகப்படுத்தி கொள்ள மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தி மனு அளிக்க 5 பேர் அல்லது அதிகபட்சம் 10 பேர் தான் செல்ல வேண்டும் என்று தெரிவித்தனர். அப்போது விவசாயிகள் நாங்கள் அனைவரும் கலெக்டரை நேரில் சந்தித்து மனு அளிக்க செல்ல வேண்டும் என்றனர்.

கோரிக்கை மனுக்களை கிழித்தனர்

ஆனால் அனைவரையும் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே அரை மணி நேரத்திற்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இருப்பினும் அவர்களை போலீசார் மனு அளிக்க உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மனு அளிக்க வந்த விவசாயிகள் கலெக்டர் அலுவலகத்தின் நுழைவு வாயில் வந்து மனு அளிக்க செல்ல அனுமதிக்காத போலீசாரையும், மாவட்ட நிர்வாகத்தையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பி கோரிக்கை மனுவை கிழித்து எறிந்தனர்.

மேலும் அவர்கள் கொண்டு வந்த விளை பொருட்கள் தரை கொட்டியும், தர்பூசணி போன்ற பழங்களை தரையில் தூக்கி போட்டு உடைத்து எதிர்ப்பு தெரிவித்தனர். இதை கண்ட போலீசார் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர்.

இதனால் கலெக்டர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story