விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி
திருமருகல் அருகே விவசாயிகளுக்கு சிறுதானிய சாகுபடி குறித்த தொழில்நுட்ப பயிற்சி
திட்டச்சேரி:
திருமருகல் ஒன்றியம் அகரக்கொந்தகை கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் அட்மா திட்டத்தில் சிறுதானிய சாகுபடி பற்றிய தொழில்நுட்ப பயிற்சி நடைபெற்றது. திருமருகல் வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்கலா தலைமையில் நடைபெற்ற பயிற்சியில், சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய உழவியல் வேளாண் விஞ்ஞானி கண்ணன் கலந்து கொண்டு சிறு தானிய பயிரிடும் முறை குறித்தும், சிறுதானியத்தின் அவசியம் குறித்தும் விவசாயிகளிடம் விளக்கி பேசினார். மேலும் தற்போது நீர் பற்றாக்குறை காரணமாக சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாற்று பயிராக சிறுதானியங்களை பயிரிட்டால் குறைந்த நீரில் அதிகமாக மகசூல் பெற்று லாபம் பெறலாம் என்றும், சிறு தானியங்களை மக்கள் உணவில் அன்றாடம் பயன்படுத்தினால் ஆரோக்கியமாக வாழலாம் என்றும், சிறுதானியங்களின் பயன்பாடுகள் மக்களிடம் அதிகரித்துள்ள நிலையில் இவற்றை பயிரிட விவசாயிகள் முன்வர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். உதவி வேளாண்மை அலுவலர் ஜாகீர் மற்றும் வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். முன்னதாக உதவி தொழில்நுட்ப மேலாளர் ராஜ்குமார் வரவேற்றார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.