ரூ.34½ கோடியில் தொழில்நுட்ப மையம்
குன்னூரில் ரூ.34½ கோடியில் புதிய தொழில்நுட்ப மையத்தை அமைச்சர் சி.வி.கணேசன் திறந்து வைத்தார்.
குன்னூர்
குன்னூரில் ரூ.34½ கோடியில் புதிய தொழில்நுட்ப மையத்தை அமைச்சர் சி.வி.கணேசன் திறந்து வைத்தார்.
புதிய தொழில்நுட்ப மையம்
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.34.65 கோடி மதிப்பில் நவீன தொழில்நுட்பத்துடன் புதிதாக தொழில்நுட்ப மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் நேற்று அதன் தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் கலந்துகொண்டு புதிய தொழில்நுட்ப மையத்தை திறந்து வைத்தார். அப்போது சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் உடனிருந்தார்.
பின்னர் மையத்தில் அமைக்கப்பட்டு உள்ள நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், ரோபாடிக் கருவிகள் போன்றவற்றை அமைச்சர்கள் பார்வையிட்டனர். தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன் நிருபர்களிடம் பேட்டி அளித்த போது கூறியதாவது:-
பாலிடெக்னிக் கல்லூரி
தற்போதைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மையங்களை கொண்டு வர அரசு முடிவு செய்து உள்ளது. இதற்காக ரூ.2,877 கோடி நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் 102 தொழிற்பயிற்சி நிலையங்கள் உள்ளன. இதில் 72 தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில் 4.0 தொழில்நுட்ப மையம் கொண்டு வரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் 7,572 பேர் தொழிற்பயிற்சி பெறுகின்றனர்.
கடந்த 2022-ம் ஆண்டு தொழிற்பயிற்சி படித்த மாணவர்கள் 76 சதவீதம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்து உள்ளது. இந்த ஆண்டு 84 சதவீதம் பேர் நேர்காணல் மூலம் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். குன்னூரில் பாலிடெக்னிக் கல்லூரி கொண்டு வருவது குறித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.