மனைவியின் வளைகாப்புக்கு அழைக்காததால் வாலிபர் தற்கொலை
திருக்குறுங்குடி அருகே மனைவியின் வளைகாப்புக்கு அழைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே மனைவியின் வளைகாப்புக்கு அழைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
காதல் திருமணம்
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மலையடிபுதூர் பருத்திவிளை தெருவைச் சேர்ந்தவர் ராமையா மகன் அசோக் (வயது 25). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள பழக்கடையில் வேலை செய்தார். அப்போது அவரும், சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் காவியபிரியாவும் காதலித்தனர்.
பின்னர் அசோக், காவிய பிரியாவை அழைத்து கொண்டு தனது ஊருக்கு வந்தார். தொடர்ந்து இருவீட்டார் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்தனர். பின்னர் கர்ப்பிணியான காவியபிரியாவுக்கும், அசோக்குக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
தற்கொலை
இதனால் காவியபிரியா கணவரிடம் கோபித்துக்கொண்டு சென்னையில் உள்ள பெற்றோரின் வீட்டுக்கு சென்றார். அங்கு கடந்த மாதம் 23-ந்தேதி காவியபிரியாவுக்கு வளைகாப்பு விழா நடந்தது. இதற்கு கணவர் அசோக் மற்றும் அவரது குடும்பத்தினரை அழைக்கவில்லை. இதுகுறித்து அசோக் தனது மனைவியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டு தகராறு செய்தார். பின்னர் மனமுடைந்த அசோக் கடந்த 26-ந்தேதி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.
உடனே அவருக்கு களக்காடு தனியார் ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக நாகர்கோவில் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அசோக் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவியின் வளைகாப்புக்கு அழைக்காததால் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.