வடமாநில தொழிலாளியை கொன்ற வாலிபர் கைது-கள்ளக்காதலியுடன் தகராறு செய்ததால் தீர்த்துக்கட்டியதாக வாக்குமூலம்


வடமாநில தொழிலாளியை கொன்ற வாலிபர் கைது-கள்ளக்காதலியுடன் தகராறு செய்ததால் தீர்த்துக்கட்டியதாக வாக்குமூலம்
x
தினத்தந்தி 20 May 2023 12:45 AM IST (Updated: 20 May 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

வடமாநில தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் கள்ளக்காதலியுடன் தகராறு செய்ததால் கொலை செய்ததாக அவர் போலீசில் தெரிவித்து உள்ளார்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

வடமாநில தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் கள்ளக்காதலியுடன் தகராறு செய்ததால் கொலை செய்ததாக அவர் போலீசில் தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அடித்துக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோட்டூரை அடுத்த ரமணமுதலிபுதூர் பிரிவில் கடந்த 15-ந்தேதி ரத்த வெள்ளத்தில் ஒருவர் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சிவ்தத்மான்ஜி (வயது 31) என்பதும், அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. மேலும் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்ததில், அடித்துக் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து வால்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கொலை செய்யப்பட்ட சிவ்தத்மான்ஜியின் செல்போன் காணாமல் போனது. இதையடுத்து போலீசார் செல்போன் எண்ணை கண்காணித்த போது, கேரள மாநிலம் மீனாட்சிபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (38) என்பவரிடம் இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மாரிமுத்து அந்த பகுதியில் தினமும் மது அருந்துவது கண்டுபிடிக்கப்பட்டது.

கள்ளக்காதலியுடன் தகராறு

இதை தொடர்ந்து போலீசார் வாகன சோதனையின் போது சண்முகபுரம் பகுதியில் வைத்து மாரிமுத்துவை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் ரமணமுதலிபுதூர் பிரிவில் சுமார் 51 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் வசித்து வருகிறார். தினமும் மாரிமுத்து மதுபாட்டில் வாங்கி சென்று, தனது கள்ளக்காதலியான அந்த பெண்ணுடன் சேர்ந்து மதுகுடித்து வந்ததாக தெரிகிறது.

சம்பவத்தன்று மாரிமுத்துவும், அந்த பெண்ணும் மது அருந்தி உள்ளனர். அப்போது போதையில் அங்கு சிவ்தத்மான்ஜி வந்ததாக தெரிகிறது. பின்னர் அந்த பெண்ணை கையை பிடித்து இழுத்து அவர் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

கைது

இதனால் அங்கு வைத்து மாரிமுத்துவிற்கும், சிவ்தத் மான்ஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. தகராறு முற்றவே ஆத்திரத்தில் அங்கு கிடந்த இரும்பு கம்பியால் மாரிமுத்து, அவரது தலையில் தாக்கி உள்ளார். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். இந்த நிலையில் போதையில் இருந்த மாரிமுத்துவிற்கு அவர் இறந்தது தெரியாமல் அங்கேயே படுத்து தூங்கி விட்டார். பின்னர் காலையில் எழுந்து பார்த்த போது, சிவ்தத் மான்ஜி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவரது செல்போனை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் மாரிமுத்துவை கைது செய்தனர்.


Next Story