இளம்பெண் சாவில் மர்மம்: உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு உறவினர்கள் மறியல்


உடையார்பாளையத்தில் இளம்பெண்னின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அரியலூர்

தகராறு

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் புது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவரது மகன் தினேஷ் (வயது 27). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் எள்ளேரி கிராமத்தில் உள்ள உறவினர் சச்சிதானந்தத்தின் மகள் வைஷ்ணவியை (24) திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

தினேஷ் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியபோது அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தினேசுக்கும், வைஷ்ணவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் வைஷ்ணவி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த வைஷ்ணவியின் பெற்றோர் தங்களது மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறினர். மேலும் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வைஷ்ணவியை அடித்து கொன்று தூக்கில் தொங்க விட்டதாக உடையார்பாளையம் போலீசில் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து, உடையார்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைஷ்ணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் இளம்பெண்ணின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் உடையார்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலை கதிரவன், உடையார்பாளையம் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி, ஆர்.டி.ஓ. பரிமளம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதில் சமாதானம் அடைந்த அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story