மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது


மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 March 2023 6:45 PM GMT (Updated: 15 March 2023 6:46 PM GMT)

ஆரல்வாய்மொழி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார். தப்பி ஓடியவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கஞ்சா விற்பனை

ஆரல்வாய்மொழி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்டீபன் மற்றும் போலீசார் தோவாளை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது தோவாளை ஆற்றுப்பாலம் அருகே மோட்டார் சைக்கிளில் 2 பேர் நின்று கொண்டு இருந்தனர். போலீசார் வருவதை பார்த்ததும் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

மற்ெறாருவரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை போட்டனர். அப்போது அவரிடம் ¾ கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதைத்தொடர்ந்து அந்த வாலிபரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது தோவாளையை அடுத்துள்ள திருமலைபுரம் வசந்தம் காலனியை சேர்ந்த அஞ்சு முத்து (வயது 24) என்பதும், மாணவர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரிய வந்தது.

வாலிபர் கைது

அதைத்தொடர்ந்து அஞ்சுமுத்துவை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த ¾ கிலோ கஞ்சாவையும், கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

அஞ்சுமுத்து கொடுத்த தகவலின் பேரில், தப்பி ஓடியவர் நாங்குநேரி அருகே உள்ள முருகன் குறிச்சி முப்புடாதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராம்கி என்ற ராமகிருஷ்ணன் என்பதும், அவர் மீது குமரி மட்டுமல்லாமல் நெல்லை மாவட்ட பகுதிகளில் உள்ள பல போலீஸ் நிலையங்களில் வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது.

அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story