முன்னாள் காதலியை கத்தியால் குத்திய வாலிபர் கைது
காரமடை அருகே முன்னாள் காதலியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
காரமடை
காரமடை அருகே முன்னாள் காதலியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
கல்லூரி நண்பருடன் காதல்
கோவை கணபதியில் உள்ள அலமேலுமங்காபுரத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 35). இவர் அந்த பகுதியில் மெடிக்கல் நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சிந்துஜா (31). இந்த நிலையில் சிந்துஜா ஏற்கனவே திருமணம் முடிந்து கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து பாலசுப்பிரமணியத்தை 2-வதாக திருமணம் செய்து கொண்டார்.
சிந்துஜா முதல் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தபோது அவருடன் கல்லூரியில் படித்த நண்பரான காரமடையை சேர்ந்த மணிகண்டன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது நாளடைவில் காதலாக மாறியது. அப்போது அவர்கள் 2 பேரும் புகைப்படம் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.
மிரட்டல்
இந்தநிலையில் சிந்துஜா 2-வது திருமணம் செய்து கொண்டபிறகு, மணிகண்டன் தன்னுடன் எடுத்த புகைப்படங்களை காட்டி மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து கடந்த 2021-ம் ஆண்டு சிந்துஜாவும், கணவர் பாலசுப்பிரமணியமும் இணைந்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பிறகு மணிகண்டன் சிந்துஜாவை தொந்தரவு செய்யவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மணிகண்டன், சிந்துஜாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு இனிமேல் பிரச்சினை செய்யமாட்டேன் என்றும், ஒருமுறை காரமடை வந்து தன்னை நேரில் பார்த்து செல்லுமாறும் கூறியுள்ளார்.
முன்னாள் காதலிக்கு கத்திக்குத்து
இதையடுத்து சிந்துஜா தனது கணவர் பாலசுப்பிரமணியனுடன் காரமடை சத்யா நகரில் உள்ள மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிந்துஜாவை குத்தினார். மேலும் தடுக்க வந்த பாலசுப்பிரமணியத்தையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதனைக்கண்ட அக்கம் பக்கத்தினர் சிந்துஜாவை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வாலிபர் கைது
இதுகுறித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மணிகண்டனை வலைவீசி தேடி வந்தனர். இதையடுத்து போலீசார் காரமடை பகுதியில் நின்று கொண்டிருந்த மணிகண்டனை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.