ரூ.30 லட்சம் திருடிய வாலிபர் கைது


ரூ.30 லட்சம் திருடிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.30 லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர்

கோவை

ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து ரூ.30 லட்சம் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ரியல் எஸ்டேட் அதிபர்

கோவை வடுகபாளையம் அருகே பச்சாபாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (வயது 64). ரியல் எஸ்டேட் அதிபர்.

இவர் கடந்த 14-ந் தேதி இரவு தனது வீட்டில் இருந்து ரூ.30 லட்சத்தை எடுத்து கொண்டு நிலம் பார்க்க காரில் சென்றார். அவர், இரவு 8 மணி அளவில் சித்ரா அருகே ஒரு தனியார் ஓட்டல் முன் காரை நிறுத்தி விட்டு சாப்பிட சென்றார்.

அவர் திரும்பி வந்து பார்த்த போது காரின் பின்பக்க கண்ணாடி உடைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கார் கதவை திறந்து பார்த்த போது ரூ.30 லட்சம் திருடப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து அவர் பீளமேடு போலீசில் புகார் அளித்தார்.

கண்காணிப்பு கேமராக்கள்

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் படி துணை கமிஷனர் (தெற்கு) சண்முகம் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பார்த்திபன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் மாரிமுத்து, கணேஷ்குமார், செந்தில்குமார், வினோத்குமார் மற்றும் போலீசார் அடங்கிய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.அவர்கள், கார் நிறுத்திய பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதில் வாலிபர் ஒருவர் ரியல் எஸ்டேட் அதிபரின் கார் கண்ணாடியை உடைத்து, பணத்தை எடுத்துக்கொண்டு காரில் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.

பறிமுதல்

அந்த காரின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த கார் நீலம்பூர் அருகே நிற்பது தெரிய வந்தது.

உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தி ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த ராஜேஸ்குமார் (33) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

இதில் அவர் கார் கண்ணாடியை உடைத்து பணத்தை திருடியது தெரியவந்தது. உடனே போலீசார் அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் உதவி கமிஷனர் பார்த்திபன் கூறுகையில், ஈஸ்வரமூர்த்தி முதலில் ரூ.45 லட்சம் திருட்டு போனதாக புகார் கூறினார். பின்னர் ரூ.30 லட்சம் திருட்டு போனதாக கூறினார்.

இது தொடர்பாக விசாரணை நடத்தி கோவையில் தனியார் கார் ஷோரூமில் டிரைவராக வேலை பார்க்கும் ராஜேஸ்குமார் கைது செய்யப் பட்டார். அவரிடம் இருந்து ரூ.24 லட்சம், ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.6 லட்சத்தை செலவு செய்து விட்டதாக ராஜேஸ்குமார் தெரிவித்தார். எனவே பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை காருக்குள் வைத்து விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.


Next Story