தூத்துக்குடியில் வாலிபரை பாட்டிலால் தாக்கி நகை, செல்போன் பறிப்பு


தூத்துக்குடியில் வாலிபரை பாட்டிலால் தாக்கி நகை, செல்போன் பறித்து சென்ற மூன்று மர்மநபர்களை போலீசார்தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் வாலிபரை பாட்டிலால் தாக்கி நகை, செல்போன் பறித்து சென்ற 3 மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நகை பறிப்பு

தூத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் இக்னேசியஸ். இவருடைய மகன் ரோகன்ராஜா (வயது 22). இவர் தூத்துக்குடியில் உள்ள தனியார் டைல்ஸ் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தெரசா நகர் பகுதியில் வந்து கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த 3 பேர் ரோகன் ராஜாவின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து நிறுத்தி உள்ளனர். பின்னர் அவரை பாட்டிலால் அடித்து உதைத்து, அவரிடம் இருந்த 1 பவுன் தங்க சங்கிலி, வெள்ளி கைச்செயின், செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் பறித்துள்ளனர். ரோகன்ராஜாவின் கூச்சல் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் அந்த 3 மர்ம நபர்களும் தப்பி ஓடிவிட்டனராம். அவரிடம் வழிப்பறி செய்த நகை, பொருட்களின் மதிப்பு ரூ.55 ஆயிரம் என்று கூறப்படுகிறது.

விசாரணை

இது குறித்து ரோகன்ராஜா தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மரிய இருதயம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட 3 மர்ம நபர்களையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story