வாகன சோதனையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் சிக்கிய வாலிபர்


வாகன சோதனையில் கள்ளச்சாராய பாக்கெட்டுகளுடன் சிக்கிய வாலிபர்
x

ஆர்.கே.பேட்டை அருகே ஆந்திர மாநிலத்தில் இருந்து கள்ளச்சாராயம் கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 105 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர்

வாகன சோதனை

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் புதூர்மேடு பகுதி வழியாக ஆந்திராவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கள்ளச்சாராயம் கடத்தப்படுவதாக ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திருத்தணி துணை போலீஸ் சூப்பிரண்டு விக்னேஷ் உத்தரவின் பேரில், சிறப்பு காவல் படையினர் புதூர்மேடு பகுதியில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது ஆந்திரா மாநிலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

கள்ளச்சாராயம் பிடிபட்டது

அதில், மோட்டார் சைக்கிளில் இருந்த 3 சாக்கு மூட்டைகளை பிரித்து பார்த்த போது, அதில் 3 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சுமார் 105 லிட்டர் கள்ளச்சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அய்யன் கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த கோதண்டம் என்பவரது மகன் நரேந்திர குமார் (வயது 30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரித்ததில், ஆந்திராவில் இருந்து கள்ளச்சாராயத்தை கடத்தி வந்து தமிழகத்தில் விற்க முயன்றது தெரியவந்தது.


Next Story