செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்


செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 13 Sep 2023 6:45 PM GMT (Updated: 13 Sep 2023 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே பயணிகள் நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து செல்போன் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்

பயணிகள் நிழற்குடைக்கு எதிர்ப்பு

விழுப்புரத்தை அடுத்த சிறுவந்தாடு அருகே உள்ள ராம்பாக்கம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. அப்போது திருவிழா சமயங்களில் தேர் வந்து திரும்பும்பட்சத்தில் அந்த இடத்தில் நிழற்குடை அமைத்தால் இடையூறாக இருக்கும், போக்குவரத்தும் பாதிக்கும் என்றுகூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள், அதன் அருகே உள்ள பொது இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்குமாறு வலியுறுத்தினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு தரப்பினர் கோவிலுக்கு அருகிலேயே பயணிகள் நிழற்குடை கட்ட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

வாலிபர் தற்கொலை மிரட்டல்

இருதரப்பு பிரச்சினையாக மாறியதால் அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன் பிறகு கோவிலுக்கு அருகில் போலீஸ் பாதுகாப்புடன் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. இதற்கு அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று காலை 9.45 மணியளவில் அதே பகுதியை சேர்ந்த குப்பன் மகன் கார்த்திகேயன்(வயது 26) என்ற பட்டதாரி வாலிபர், திடீரென அங்குள்ள தனியார் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்த தகவல் அறிந்ததும் வளவனூர் போலீசார் அங்கு விரைந்து வந்து கார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராம்பாக்கம் சாலை சந்திப்பு பகுதியில் கோவில் இடத்தில் கட்டப்பட்டு வரும் பயணிகள் நிழற்குடை கட்டுமான பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும், இல்லையெனில் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே குதித்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். அவரிடம் போலீசார் எவ்வளவோ பேச்சுவார்த்தை நடத்தியும் அவர் கீழே இறங்கி வரவில்லை.

பொதுமக்கள் சாலை மறியல்

இதனிடையே அங்கு திரண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பயணிகள் நிழற்குடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாலையின் குறுக்கே மரக்கட்டை மற்றும் குச்சிகளை போட்டு திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வளவனூர்-பட்டாம்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் அங்கு விரைந்து வந்து தற்கொலை மிரட்டல் விடுத்த கார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இப்பிரச்சினை தொடர்பாக அனைத்து தரப்பினர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி அதன் பிறகு கட்டுமான பணிகள் நடைபெறும் என உறுதியளித்தார். இதை ஏற்ற கார்த்திகேயன், காலை 11.30 மணியளவில் செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்தார்.

தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் இன்ஸ்பெக்டர் விஜயகுமார், பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தார். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் ராம்பாக்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story