வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
கறம்பக்குடி அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலிபர்
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மங்கான் கொல்லைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் ரஞ்சித் (வயது 21). இவர் 8-ம் வகுப்பு வரை படித்து உள்ளார்.
இவருக்கு வேலை ஏதும் கிடைக்காததால் விரக்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 13-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார்.
தற்கொலை
இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரஞ்சித் நேற்று இறந்தார். இதுகுறித்து ரஞ்சித்தின் தந்தை ஆறுமுகம் மழையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சாமிக்கண்ணு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். வேலை கிடைக்காததால் வாலிபர் விஷம் குடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.