பொன்னணியாறு அணையில் குதித்து வாலிபர் தற்கொலை

வாகன கடன் தவணையை கட்ட முடியாமல் பொன்னணியாறு அணையில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
வாகன கடன்
கரூர் மாவட்டம், குளித்தலை வட்டம் சின்னியம்பாளையம் ஊராட்சியை சேர்ந்த பொத்தாநாயக்கனூரை சேர்ந்தவர் கிருஷ்ண நாயக்கர் மகன் சுந்தர்ராஜ்(வயது 22). இவர் நெசவு வேலை செய்து வருகிறார். இவர் தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி, இருசக்கர வாகனம் வாங்கி உள்ளார். சரியாக வேலை கிடைக்காததால் வண்டி தவணையை கட்ட முடியவில்லை. இதனால் மனமுடைந்த சுந்தர்ராஜ் கடந்த 27-ந் தேதி பொன்னணியாறு அணைக்கு சென்று அங்கிருந்து வீட்டுக்கு போன் செய்துள்ளார். பிறகு அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. வீட்டிற்கும் வரவில்லை. அதன்பிறகு கிருஷ்ண நாயக்கர் அங்கு சென்று தேடியும் மகனை காணவில்லை.
போலீசார் விசாரணை
இதுகுறித்து பாலவிடுதி போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தார். புகாரின் பேரில் அங்கு சென்ற போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று இறந்த நிலையில் பொன்னணியாறு அணையில் சுந்தர்ராஜ் உடல் கரை ஒதுங்கி உள்ளது. இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.