போலீஸ் நிலையத்தில் உறவினர்களுடன் வாலிபர் தர்ணா

மனைவியை கண்டுபிடித்து தரக்கோரி போலீஸ் நிலையத்தில் உறவினர்களுடன் வாலிபர் தர்ணாவில் ஈடுபட்டார்.
திருப்பத்தூர் அருகே உள்ள பொம்மிக்குப்பம் பழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மதன்குமார். இவரது மனைவி விஜயசாந்தி (வயது 25). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்தநிலையில் விஜயசாந்தி கடந்த 8-ந் தேதி மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மதன்குமார் திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தநிலையில் மாயமான விஜயசாந்தியை கண்டுபிடிப்பதில் போலீசார் தாமதப்படுத்துவதாகக்கூறி மதன்குமார் மற்றும் அவரது உறவினர்கள் நேற்று திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மற்றும் போலீசார் மதன்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விஜயசாந்தியை விரைவில் கண்டுபிடிப்பதாக கூறியதன் பேரில், தர்ணாவில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






