பாலாற்று ரெயில்வே பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி


பாலாற்று ரெயில்வே பாலத்தில் இருந்து விழுந்து வாலிபர் பலி
x

வேலூரில் பாலாற்று ரெயில்வே பாலத்தில் இருந்து செல்பி எடுத்தபோது நின்று கொண்டிருந்த அடிப்பகுதி உடைந்ததால் கீழே விழுந்து வாலிபர் பலியானார்.

வேலூர்

செல்பி எடுத்தனர்

வேலூர் கன்சால்பேட்டை இந்திராநகரை சேர்ந்தவர் பில்லா. இவருடைய மகன் ஆகாஷ் (வயது 20). வேலூர் பைபாஸ் சாலையில் உள்ள மெக்கானிக் ஷெட்டில் உதவியாளராக வேலை செய்து வந்தார். இவர் நண்பர்களுடன் வேலூரில் இருந்து காட்பாடிக்கு செல்லும் பாலாற்று ரெயில்வே பாலத்தில் நடந்து சென்றார்.

ரெயில்வே பாலத்தின் தண்டவாளம் மற்றும் கட்டிட தூண்களில் ஏற்படும் பழுதை சரிசெய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கூண்டில் (பிரிட்ஜ் டெக்) சாய்ந்து நின்றபடி ஆகாஷ் மற்றும் நண்பர்கள் ஒவ்வொருவராக செல்பி எடுத்துள்ளனர். இரும்பு கூண்டின் அடிப்பகுதி உடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது.

கீழே விழுந்து பலி

ஆகாஷ் இரும்பு கூண்டில் சாய்ந்தபடி செல்பி எடுத்தபோது திடீரென கூண்டின் ஒருபக்கம் உடைந்தது. அதனால் அவர் சுமார் 20 அடி உயரத்தில் இருந்து கீழே பாலாற்றில் விழுந்தார். அவரின் மார்பு பகுதியின் மீது உடைந்த இரும்பு தகடு விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் பென்ட்லேன்ட் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவிக்கு பின்னர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சிறிதுநேரத்தில் உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார். ரெயில்வே பாலத்தில் செல்பி எடுத்தபோது வாலிபர் கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story