ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி


ஆவடி ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
x

ஆவடி ரெயில் நிலையத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கியபோது நடைமேடைக்கும், எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் இடையே தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

ஆவடி,

வேலூர் மாவட்டம் தேவி செட்டிகுப்பம் அடுத்த ஆண்டிகோட்டை ஆத்துமேடு காலனியை சேர்ந்தவர் சத்யராஜ் (வயது 33). இவர், சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

நேற்று காலை இவர், வேலை விஷயமாக திருவேற்காடு செல்வதற்காக வீட்டில் இருந்து புறப்பட்டு மதுரையில் இருந்து சண்டிகார் சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்தார்.

தவறி விழுந்து சாவு

ஆவடி ரெயில் நிலையத்தில் 4-வது நடைமேடையில் வந்தபோது எக்ஸ்பிரஸ் ரெயில் சற்று மெதுவாக சென்றது. அப்போது சத்யராஜ் ஆவடியில் இறங்கினால் திருவேற்காடுக்கு சீக்கிரம் சென்றுவிடலாம் என்று நினைத்து, ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் இருந்து நடைமேடையில் இறங்க முயன்றார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நடைமேடைக்கும், எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கும் இடையே தவறி தண்டவாளத்தில் விழுந்துவிட்டார். ரெயில் சக்கரம் சத்யராஜ் மீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

போலீஸ் விசாரணை

இது குறித்து தகவல் அறிந்து வந்த ஆவடி ரெயில்வே போலீசார் சத்யராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான சத்யராஜுக்கு ஜெயப்பிரியா (27) என்ற மனைவியும், ஒரு மாத ஆண் குழந்தையும் உள்ளது.


Next Story